குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தீவிரமாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்தது போல் வேறு மாவட்டங்களில் நடைபெற்றதா? என விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது சிபிசிஐடி.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை , ராமேஸ்வரம் ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, தேர்வில் வெற்றிபெற்ற 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இடைத் தரகர்களாக செயல்பட்ட மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு மையங்களிலும் பொறுப்பாளர்களாக இருந்த 2 தாசில்தார்களும் சிபிசிஐடி விசாரணை வளையத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்தது போல் தமிழகத்தில் வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற முறைகேடு நடைபெற்றுள்ளதா? என்பதை கண்டறிய சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சிவகங்கை, கடலூர், நெல்லை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தேர் வெழுதியவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சிலரைப் பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.