சவீதா மருத்துவக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை தேவை – அமைச்சர் அருண்ராஜ்
இளநிலை மருத்துவ மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக, சவீதா மருத்துவக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. இளநிலை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலையில், தண்டலத்தில் செயல்படும் சவீதா மருத்துவக் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களிடம் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயான முழு கட்டணத்தை செலுத்துமாறு தெரிவித்ததாகத் தெரிகிறது.
கட்டணத்தை செலுத்தாத மாணவர்களின் வருகைப்பதிவு இணையதளம் முடக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவர்கள் அளித்த புகார் தொடர்பாக தமிழ்நாடு அரசு நடத்திய விசாரணைக்கு சவீதா மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஆஜராகவில்லை. இந்த நிலையில், சவீதா மருத்துவக் கல்லூரி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் அங்கமாக இருப்பதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்திற்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.
மாணவர்களுக்கான வருகைப் பதிவு இணையதளத்தை மீண்டும் திறக்கவும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பிச் செலுத்த உத்தரவிடுமாறும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





