திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு கால நடைமுறையை மாற்றக் கூடாது என அரசு தரப்பு வாதிட்ட நிலையில் விசாரணை இன்றும் நடைபெறவுள்ளது.கடந்தாண்டு டிசம்பர் மாதம் ராமரவிக்குமார் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்கு பதிலாக பழமையான தீபத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் தீபம் ஏற்றக் கோரிய உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு, தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு விசாரித்தது.
விசாரணையின் தொடக்கத்தில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா தெரிவித்தார். மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற உத்தரவின் சில அம்சங்களை எதிர்த்து மனுத் தாக்கல் செய்திருப்பதாக கூறினர். பொதுமக்கள் அனைவரும் தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், தீபத்தூணில் விளக்கேற்றுவது வழக்கமான நடைமுறை என்பதால், தொல்லியல் துறை அனுமதிக்கு காத்திருக்காமல் நேரடியாக ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜெய்தீப் குப்தா, சேகர் நாப்டே, கூடுதல் தலைமை வழக்கறிஞர் பிரசாந்தோ, கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜராகினர். கோயில், தர்கா அமைந்துள்ள பகுதிகளின் புகைப்படங்களை நீதிபதிகளிடம் அவர்கள் சமர்ப்பித்தனர்.
1923ஆம் ஆண்டு தீர்ப்பின்படி படிக்கட்டு உள்ளிட்ட பகுதிகள் தர்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், சுதந்திரத்துக்கு பிறகான வழக்குகளிலும் அது உறுதி செய்யப்பட்டதாகவும் அரசு தரப்பு தெரிவித்தது.
கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும், அந்த நடைமுறையை மாற்றி கல்தூணில் ஏற்றும் கோரிக்கையை ஏற்க கூடாது என்றும் வாதிடப்பட்டது. அந்தக் கல்தூண் கோயிலுக்கு சொந்தமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், அது தர்காவுக்கு மிக அருகில் இருப்பதையும் அரசு சுட்டிக்காட்டியது. நூற்றாண்டுக்கும் மேலான நடைமுறையை மாற்றினால் தேவையற்ற சர்ச்சைகள் எழும் என்றும், இரு மதத்தினரிடையே இதுவரை பிரச்னை இல்லாத நிலையில், நீதிமன்ற உத்தரவால் அமைதி சீர்குலையக் கூடாது என்றும் அரசு தரப்பு வலியுறுத்தியது.
1994ஆம் ஆண்டு, இந்து முன்னணியினர் மலை மீது ஏறி தீபம் ஏற்ற முயன்ற விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் அரசு தரப்பு எடுத்துக்காட்டியது. வெளிநபர்கள் யாரும் மலை மீது ஏறி தீபம் ஏற்றக் கூடாது என்று அப்போது நீதிமன்றம் தெளிவுபடுத்தியதாகவும், இந்துக்களின் வழிபாட்டு உரிமையை போலவே இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பு வாதிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மலை மீது ஏறி தீபம் ஏற்ற அனுமதி கோரும் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியது. இன்னும் ஒரு வாரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளதால், அதற்கு முன்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





