மாணவர் அகிலன் மரணத்திற்கு காரணமான கைது செய்யப்படணும்!
கோவை பீளமேட்டில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் அகிலனின் இல்லத்திற்குத் திரைப்பட நடிகை அம்பிகா சென்று, அகிலனின் பெற்றோர் அசோக்குமார் – கௌசல்யா ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.அப்போது, தான் முதல் முறையாகக் குறும்படம் ஒன்றை எடுத்து வருவதாகவும், அகிலன் சம்பவம் போன்ற கதை அம்சம் கொண்ட குறும்படத்தை சமீபத்தில் எடுத்து முடித்திருப்பதாகவும், தற்போது இந்தச் சம்பவத்தை அறிந்தவுடன் நேரடியாகப் பார்க்க வந்ததாகவும் அவர் கூறினார்.
அகிலனின் குடும்பத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடிய நடிகை அம்பிகா, பின்னர் காணொளி ஒன்றை வெளியிட்டார். அவர் வெளியிட்ட காணொளியில் பேசியதாவது:
மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்டது மனதைப் பாதித்துள்ளது. சாதி எதுவும் இருக்கக்கூடாது. தயவு செய்து இனிமேல் ஒரு அகிலன் வரக்கூடாது. எல்லோரும் சேர்ந்து உங்களை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள், நீங்கள் தான் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் கேள்வி எழுப்பிய அவர், உங்களுக்கு இது சரி என்று படுகிறதா என்றும், இவர்கள் மனவருத்தப்பட்டு ஏதாவது சொன்னால் நம் மனம் தாங்காது, நமக்கு ஏதாவது நடந்துவிடும் என்றும் கூறினார்.
அனைத்து ஆதாரங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன; எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவு நம்பிக்கையில் உங்களை ஜெயிக்க வைத்தார்கள், அவர்களின் உணர்வுகள் உங்களுக்குப் புரியும். உங்கள் குழந்தையை அந்த இடத்தில் வைத்துப் பாருங்கள், அந்த அப்பா, அம்மா இருக்கும் இடத்தில் உங்களை வைத்துப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் முதலமைச்சரிடம் போக வேண்டும், முதலமைச்சர் வர வேண்டும் என யாரும் நினைக்கக் கூடாது; அவருக்குப் பாதுகாப்பு வேறு கொடுக்க வேண்டும். தவெக அமைச்சர்கள் இந்த ஊரிலேயே இருக்கின்றீர்கள், நீங்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆசிரியர்கள் அருண்குமார், விஜயகுமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்; ஆனால் இங்கு பெற்றோரோ ‘நான் பையனிடம் போகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தயவு செய்து நடவடிக்கை எடுங்கள், தாமதப்படுத்தாதீர்கள்.
மாணவன் அகிலன் மரணத்திற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரியவந்தது எனக்கு வருத்தமளிக்கிறது. அந்த இடத்தில் நானாக இருந்தால் அவர்களை நேரில் வந்து பார்த்து நடவடிக்கை எடுத்திருப்பேன். பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்கள், அகிலனைத் தங்கள் இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்றும் அந்த காணொளியில் நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





