--- --:--:-- --

போன் பே, கூகுள் பே மூலம் ஓட்டு விலைக்கு வாங்கப்படுகிறது!

7

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணனுக்கு ஆதரவாக அந்த கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சனிக் கிழமை (அக்.3) தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் போட்டியிடும் பெரிய கட்சியினர் பெரிய பெரிய வாகனங்களில் வந்து கிராமங்களில் பணம் விநியோகிப்பதாக குற்றம்சாட்டினார்.

 

 

அவர் பேசியதாவது, ”சாத்தான்குளம் மற்றும் நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை என்பது தமிழில் நீண்ட காலமாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், அது திருத்தப்பட்டு இந்தியில் எழுதப்பட்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல. அவரவர் மாநிலத்தில் அவரவர் மொழிக்குத்தான் முன்னுரிமை; எனவே இது ஏற்புடையதல்ல.

 

 

இதற்கு மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தொடர்ந்து ஒன்றிய அரசு இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆட்சியின் போதும் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள், அதை அன்றைய ஆட்சியாளர்கள் எதிர்த்தார்கள். அதே வழியில் இன்று இத்தகைய மொழி திணிப்புகளை தமிழக அரசு எதிர்க்க முன்வர வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் ஏன் நடைபெறுகிறது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.

 

 

மதுராந்தகத்தில் கடந்த நான்கு தினங்களாக நாங்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டோம், தாராபுரத்திலும் மேற்கொள்கிறோம். எல்லோரும் பெரிய பெரிய வாகனங்களில், குக்கிராமங்களில் கூட 50, 60 வாகனங்களுடன் வருகிறார்கள். அங்கு முன்னணி தலைவர்கள், நண்பர்கள் அனைவரும் செல்போனில் போன் பே, கூகுள் பே எவ்வாறு செய்வது என்கிற கணக்கெடுக்கிறார்கள். நாடு இந்த திசையில் பயணித்தால் தேர்தல் முறை கேள்விக்குள்ளாகும், நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகும்.

 

 

தேர்தல் ஆணையம் தூங்கி வருகிறது அல்லது பாராமுகமாக இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு முழு பொறுப்பு இருக்கிறது, அது முற்றிலுமாக தோற்றுவிட்டது. இவ்வளவு கோடி பணங்களை எப்படி வெளியில் கொண்டு வர முடியும்? வங்கிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பணங்களை எடுக்க முடியாது என்பதால், ஏற்கனவே பல கோடிக்கணக்கான பணங்களை எடுத்து எப்படி பல இடங்களில் பதுக்க முடியும்? எப்படி அதை மக்களுக்கு தர முடியும்? ஆனால் அந்த பணியில்தான் இவர்கள் ஈடுபடுகிறார்கள். அரசியலுக்கு அப்பால் நின்று நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சீரழிக்கும் இவர்களை சரித்திரம் குற்றவாளிகளாக நிறுத்தியுள்ளது.

 

 

எங்களைப் பொறுத்தவரைக்கும் தாராபுரத்தில் ஒரு கட்டிடத் தொழிலாளியை நாங்கள் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். இதுவரை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் எங்கள் தலைவர்களோ தோழர்களோ தொண்டர்களோ அரசியலுக்கு அப்பால் ஒரு வார்த்தையும் பேசியதில்லை. பெண்களைப் பற்றியோ தனிநபர், குடும்பப் பிரச்சினைகளைப் பற்றியோ இதுவரை நாங்கள் பேசியதில்லை. அது எங்கள் பழக்கமும் அல்ல, மரபும் அல்ல.

 

 

ஒன்றிய அரசு அதிகாரத்தைக் குவித்துக் கொள்கிறது, மொழியைத் திணிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு அடம்பிடிக்கிறது. மலை மக்களை வெளியேற்ற துடிக்கிறார்கள். ஏழைகள், சாதாரண தெருவோரத்தில் வியாபாரம் செய்பவர்கள் அகற்றப்படுகிறார்கள். விலைவாசி பால், அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. வாங்கும் சக்தி ஏழைகளுக்கு இல்லை. இதைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், ஒரு வாய்ப்பை எங்களுக்கு தாருங்கள் என்று சொல்கிறோம்.

 

 

கண்ணியத்துடனும் சிறந்த அரசியலுடனும் பேசி வந்தார். ஆனால் உருவக்கேலி ஏற்புடையது அல்ல. உடலும் மொழியும் மிகுந்த கண்ணியத்தோடு இருக்க வேண்டும், பிறரை மதிக்க வேண்டும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற பெரும் அரசியல் தலைவர்கள் தோன்றிய இயக்கம் இது. எனவே எதன் பொருட்டும் பெண்ணை இழிவு செய்வதை ஏற்க முடியாது. கம்யூனிஸ்ட்கள் அந்த கருத்து எந்த திசையிலிருந்து வந்தாலும் அதை நிராகரிக்கிறோம், எதிர்க்கிறோம்.

 

 

அமைச்சர்கள் ஊரையே விலைபேசும் வகையில் முகாம் அமைக்கிறார்கள். இதுவரை எட்டி பார்க்காத அமைச்சர்கள் எல்லாம் தெருக்களில் முகாமிடுவதன் காரணம் என்ன? ஊரையே நீங்கள் விலை பேசுகிறீர்களா? நாங்கள் த.வெ.க.வை ஆதரித்தது ஜனநாயகத்திற்காக, மக்கள் அதிக இடங்களில் வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிகள் மதிக்கிறோம். மக்கள் அதிகாரத்தில் ஆளுநர் அமர்வதை கம்யூனிஸ்ட்கள் எதிர்க்கிறோம். வெளியிலிருந்து ஆதரிக்கிறோம், கூட்டணியில் நாங்கள் இல்லை. வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது மக்கள் எழுதிய தீர்ப்புக்கு மதிப்பளிப்பது, பி.ஜே.பி.யின் மறைமுக ஆட்சியைத் தடுப்பது அவ்வளவுதான்.

 

 

எங்களைப் பொறுத்தவரைக்கும் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகியவற்றை ஜனநாயக சக்திகளாகப் பார்க்கிறோம். அரசியலில் எங்களுக்குத் தோற்கடிக்க வேண்டிய பகைமைச் சக்தி என்பது இந்தியா முழுவதும் பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான்.

 

 

எங்களிடம் அரசியல் இருக்கிறது, நேர்மை இருக்கிறது, தொண்டும் சேவையும் இருக்கிறது. சிந்திக்க ஆரம்பித்தால் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள், நாங்கள்தான் வெற்றி பெறுவோம். மக்களின் நலன்கருதி, முடங்கிக் கிடக்கும் பொதுப்பணிகளையும், மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையப் பணிகளையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு வீரபாண்டியன் அந்த பேட்டியில் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon