ரயில் டிக்கெட் முன்பதிவில் மெகா மாற்றம்..!
இந்தியாவில் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனினும், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஏற்படும் சிக்கலால் அவ்வப்போது டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தான் ஐஆர்சிடிசி இணையதளத்தை மேம்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளில் ரயில்வே அமைச்சகம் ஈடுபட்டு வந்தது.
அதன்படி, புதிய வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளத்தை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செயய்யவுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதளம் வரும் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், மேம்படுத்தப்பட்ட இணையதளம் மூலமாக இனி நிமிடத்திற்கு 1.5 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம். இதற்கு முன் 32,000-க்கு ரயில் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்கிற நிலை இருந்தது.
அதேபோல், நிமிடத்திற்கு 4 லட்சம் முதல் 40 லட்சம் வரை ரயில்வே உதவிகளை இனி இணையத்தில் கேட்டுப் பெற முடியும். அதாவது, பிஎன்ஆர் (PNR) மற்றும் ரயில் நேரம் உள்ளிட்ட விவரங்களை இனி ஒரே நிமிடத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் தேடி தெரிந்து கொள்ள முடியும். மேம்படுத்தப்பட்ட இணையதளம் வாயிலாக தாமதமின்றி தட்கல் ரயில் டிக்கெட்டுகளை இனி வேகமாக முன்பதிவு செய்யலாம் என்றும் ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தட்கல் நேரங்களில் கூட இணையதளம் ஹேங் ஆகாமல் மிக வேகமாக வேலை செய்யும் என்றும் அதற்கேற்ப ரயில் டிக்கெட் முன்பதிவின்போது தேவையில்லாத CAPTCHA கேட்கப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவை தாமதப்படுத்தும் பாப்-அப் விளம்பரங்கள் எதுவும் வராது. இதனால் இன்னும் வேகமாக புக் செய்யலாம். டிக்கெட் முன்பதிவில் போதே நமக்கு வேண்டிய சீட் அல்லது படுக்கை வசதியை (Seat/Berth) நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் விருப்பமான சீட் தேர்வு வசதி கொண்டுவரப்படுகிறது. மேலும், வெவ்வேறு தேதிகளில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு உள்ளது என்பதை ஒப்பிட்டு பார்க்க ‘Fare Calendar’ வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெவ்வேறு நாட்களில் என்னென்ன விலை என்று ஒப்பிட்டுப் பார்த்து, குறைந்த விலையுள்ள தேதியைத் தேர்வு செய்யலாம்.
இப்படியான அம்சங்களுடன் தற்போது இருப்பதை விட 10 மடங்கு அதிகமான பயனர்கள் பயன்படுத்தினாலும் சிரமம் இல்லாமல் செயல்படும் வகையில் ஐஆர்சிடிசி இணையதளம் மேம்படுத்துள்ளது என்றும் இந்த புதிய வசதிகள் அனைத்தும் RailOne செயலியிலும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.






