பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த முகேஷ் அம்பானி..!
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 49 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி உரையாற்றி வருகிறார்.அப்போது தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக இருந்து வரலாற்று சாதனை படைத்துள்ள பிரதமர் மோடிக்கு ரிலையன்ஸ் பங்குதாரர்கள் சார்பாக முகேஷ் அம்பானி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
ஜனநாயக நாடுகளில் எந்த தலைவரும் செய்யாத வரலாற்று சாதனையை பிரதமர் ஏற்படுத்தியுள்ளதாக அவருக்கு முகேஷ் அம்பானி பாராட்டுக்களை தெரிவித்தார். தொடர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் குறித்து முகேஷ் அம்பானி உரையாற்றினார்.இந்த பொதுக்குழு கூட்டத்தின் மிக முக்கிய எதிர்பார்ப்பு ஜியோவின் ஐபிஓ சந்தைப் பங்குகள் வெளியீடு குறித்த அறிவிப்பு உள்ளது. சுமார் $4 பில்லியன் (சுமார் ரூ. 33,000 கோடிக்கும் மேல்) மதிப்புள்ள இந்த ஐபிஓ, இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியீடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காலக்கெடு மற்றும் செபி (SEBI) அமைப்பிடம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்வது குறித்த தெளிவான அறிவிப்பை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.ரிலையன்ஸ் நிறுவனம் மெட்டா (Meta) நிறுவனத்துடன் இணைந்து ஜாம்நகரில் 168 மெகாவாட் தரவு மையத்தை (Data Centre) அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த 7 ஆண்டுகளில் ஏஐ (AI) தொழில்நுட்பத்திற்காக மிகப்பெரிய முதலீடுகளை ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இந்திய வர்த்தக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





