விசிக அலுவலகத்திற்கு வந்த புதிய சோஃபா..!
விசிக அலுவலகத்திற்கு வந்த புதிய சோஃபா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, புஷ்பா பட பாணியில் புது சோஃபா போகுது, அதன்பின்னாடியே புது முதலமைச்சர் போகிறார் என்று விமர்சனம் செய்து இருந்தார்.
விசிக தலைவர் திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமை திட்டம் தொடரும் என சொன்னது மகிழ்ச்சியானது. அதை வரவு வைக்க வேண்டிய நாள் சற்று தள்ளி போவது ஒரு புறம் இருந்தாலும், விரைவில் அனைவருக்கும் வரவு வைக்கப்படும் என சொல்வது வரவேற்கத்தக்கது என்றார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், விசிக அலுவலகத்துக்கு வந்த சோஃபா, ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட ஒன்று. அந்த சோஃபா விஜய்க்காக வாங்கப்பட்டது அல்ல. உதயநிதி சட்டப்பேரவையில் விசிகவைச் சொல்லவில்லை. அதிமுகவில் உருவாகி உள்ள புதிய அணி அல்லது சட்டமன்ற உறுப்பினர்களைச் சொல்லி முன்வைக்கப்பட்ட கருத்து என்று கருதுகிறேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும் உங்களை தலித் முதல்வரை ஈபிஎஸ் தடுத்தார் என சி.வி. சண்முகம் குற்றம்சாட்டியது குறித்த கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்து பேசிய திருமாவளவன், “எனக்கு தெரிந்த நண்பர்கள் முதலமைச்சர் ஆக்குவது குறித்து பேச்சு நடந்ததாக சொன்னார்கள். ஆனால் அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. இடதுசாரிகள் எடுக்கும் முடிவை வைத்து எங்கள் கட்சியில் கூட்டம் நடத்தி அதன் பின்னர் முடிவு எடுப்போம் என சொன்னோம்.
அதன்படி தான் நாங்கள் கலந்தாய்வு செய்து முடிவெடுத்தோம். எங்கள் கட்சியின் கூட்டம் முடிந்து கட்சியினரிடமே நாளை மறுநாள் தான் அறிவிப்போம் என சொன்னேன். ஆனால் நான் ஊடகங்களுக்கு யாருக்கும் தெரிவிக்கவில்லை. திட்டமிட்டபடி நடந்த கட்சியின் ஆன்லைன் கூட்டத்தில் எடுத்த முடிவில் பல கருத்துகள் வந்தது.
அதன் பின்னர் என்னுடைய முடிவுக்கு கட்டுப்படுவோம் என கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். அதன் பின்னர் தான் நாங்கள் அறிவித்தோம். ஆனால் எங்களை பிடிக்காத சிலர் நாங்கள் தலைமறைவாகி விட்டோம், எங்கோ சென்று விட்டோம் என அவதூறுகளை பேசினார்கள். எங்களுக்குள்ளாக பேசி முடிவு செய்வதற்குள், பேரம் பேசுவதாக எங்களுக்கு எதிரானவர்கள் அவதூறு பரப்பினார்கள் என்றும் தெரிவித்தார்.





