அதிமுகவில் பிளவு? எடப்பாடியின் கோட்டையில் விரிசல்.. சண்முகம், வேலுமணி திடீர் போர்க்கொடி!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் வெற்றி அரசியல் சூறாவளியை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் திமுகவின் கோட்டை, காங்கிரஸ் வெளியேறியதால் ஆட்டம் கண்டிருக்கிறது. மறுபுறம் எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவோ, அதிகாரப் பசி மற்றும் உட்கட்சிப் பூசலால் நிலைகுலைந்து நிற்கிறது. இது ஏதோ ஒரு சாதாரண அரசியல் மாற்றம் அல்ல; தமிழக வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பம்.
தேர்தலில் விஜய் நிகழ்த்திய ‘அதிர்ச்சி வைத்தியம்’ திமுகவையும், அதிமுகவையும் ஒருசேர நிலைகுலைய வைத்திருக்கிறது. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் தவெக திணறுவதும் அதே வேளையில், அதிமுகவின் மூத்த தலைவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதும் அரசியல் களம் தகிக்கும் தகிப்பை பறைசாற்றுகிறது.
அதிகாரப்பசி எனும் ஆடும் ஊஞ்சல்
‘ஆட்சி அதிகாரத்தில் இல்லையென்றால், எல்லாமே செல்லாக்காசுதான்’ என்ற எதார்த்தம், அதிமுகவின் மூத்த தலைவர்களின் கண்களை மறைத்திருக்கிறது. சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் தலைமையில் ஒரு கோஷ்டி, தவெக அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க, அதை எடப்பாடி பழனிசாமி தரப்பு வன்மையாக மறுக்கிறது. இது ஏதோ ஒரு கொள்கை மோதல் அல்ல; இது அதிகாரத்தின் மீதான பிடிமானம்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் கூடிய 35 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ரகசிய ஆலோசனை, அதிமுகவில் ஒரு பூகம்பத்தையே கிளப்பிவிட்டது. “விஜய் தலைமையில் அமையும் தவெக அமைச்சரவையில் நாமும் பங்கேற்க வேண்டும், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று ஒரு தரப்பு வாதிட்டுள்ளது. ஆனால், “கூட்டணிக்கும் ஆதரவுக்கும் இடமே இல்லை” என்று எடப்பாடி உறுதியாகக் கூறிவிட்டார். இந்த முரண்பாடு, கட்சியின் பிளவிற்கான விதையை விதைத்துள்ளது.
தளபதியின் வியூகமும், அதிமுகவின் விதியும்
விஜய் அமைதியாக தனது வியூகங்களை வகுக்க, அதிமுகவின் உள்ளே ‘கொத்தாக வளைக்கும்’ வேலைகள் நடப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. தங்கமணி தரப்போ, “ஆதரவு அளிக்கலாம், ஆனால் அமைச்சரவையில் மட்டும் பங்கேற்க வேண்டாம்” என்று ஒரு நடுத்தரப் பாதையைத் தேடுகிறது. ஆனால், சி.வி. சண்முகமோ, “பதவி இல்லையெனில் எந்தப் பயனுமில்லை” என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். தவெக தரப்பில் எஸ்.பி.வேலுமணிக்கு துணை முதல்வர் பதவி, சி.வி. சண்முகத்துக்கு வளமான இலாகா தர சிக்னல் தரப்பட்டுள்ளது.
தனிக்காட்டு ராஜாவாக வலம் வர நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோரின் போர்க்கொடி உயர்த்தி இருப்பது, கடும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. பல சீனியர்களை வெளியேற்றிவிட்டு, ஒற்றைத் தலைமை என்ற போர்வைக்குள் கட்சியைச் சுருக்கிய அவருக்கு, இன்று அதே கட்சிக்குள் இருந்து ஒரு பெரிய ஆபத்து உருவெடுத்திருப்பது விதியின் விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் பிளவு; கவலையில் தொண்டர்கள்!
தவெகவுடன் கூட்டணி சேருவது அல்லது ஆதரவளிப்பது குறித்துப் பேசப்படும் ஒவ்வொரு வினாடியும், அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தவெகவின் பக்கம் எம்.எல்.ஏ.க்கள் சாயும் பட்சத்தில், அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

சி.வி. சண்முகம் தலைமையிலான இந்த அணி, ஒருவேளை எடப்பாடியின் பேச்சைக் கேட்கவில்லை என்றால், அதிமுக பிளவுபடுவது உறுதி. எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் அமைச்சர் பதவிகளுக்காகத் தவெகவுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பது, அதிமுகவின் பாரம்பரியத்தை அடியோடு சாய்த்துவிடும் என்று அடிமட்டத் தொண்டர்கள் கவலைப்படுகின்றனர்.
வரும் இரண்டு நாட்கள், தமிழக அரசியலில் மிகவும் முக்கியமானவை. அதிமுக தனது பிடியைத் தக்கவைக்குமா அல்லது அதிகாரத்திற்காகக் கட்சி இரண்டாக உடையும் துயரத்தை எதிர்கொள்ளுமா? என்பதற்கு இன்னும் ஓரிரு நாட்களில் விடை கிடைத்துவிடும்.
மொத்தத்தில், எடப்பாடியின் கோட்டை தற்போது பெரும் அதிர்வுகளுக்கு உள்ளாகியிருக்கிறது; அந்த அதிர்வுகள் அதிமுகவின் தலையெழுத்தையே மாற்றி எழுதப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





