தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்..!
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார். ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் பதவி விலகிய நிலையில், அந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டார்.
மேலும், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்தார். இந்நிலையில், ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், நேற்றிரவு சென்னை வந்தார். கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அர்லேகருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே என் நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, ரகுபதி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோரும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தலைமைச் செயலாளர், காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சென்னையிலிருந்து ஆர்.என்.ரவி, நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து மேற்குவங்கத்துக்கு சென்ற ஆர்.என்.ரவிக்கு மக்கள் மாளிகையில் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, மேற்குவங்க ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார்.





