--- --:--:-- --

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்பது வதந்தி – தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் விளக்கம்

1

சென்னை முதல் கன்னியாகுமரி வரை 7000 பெட்ரோல் பங்குகளில் விநியோகம் சீராக உள்ளது. அச்சப்பட தேவையில்லை” என்று தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கத்தின் தலைவர் முரளி விளக்கமளித்துள்ளார்.
ஈரான் போர் பதற்றம் காரணமாக, தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என்றும், விலை உயரப் போவதாகவும் வதந்தி பரவியது.

 

இதனை நம்பி ஏராளமான வாகன ஓட்டிகள், நேற்றிரவு முதலே பெட்ரோல் நிலையங்களில் குவியத் தொடங்கினர். குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு பெட்ரோல் பங்குகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பெட்ரோல், டீசலை நிரப்பி வருகின்றனர்.

 

மேலும், வழக்கமாக நிரப்பும் பெட்ரோலை விட அதிக அளவிற்கு வாங்கி செல்கின்றனர். இதனால், செயற்கையாக பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோலிய வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், கடலூரில் பெட்ரோலிய வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் முரளி செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது அவர் பேசும்போது, “தமிழகம் முழுவதும் உள்ள 7,000 பெட்ரோல் பங்குகளில் எந்தவித பெட்ரோல் தட்டுப்பாடும் இல்லை; விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. டீலர்களுக்கு கடன் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. மற்றபடி முழு அளவில் பெட்ரோல் சப்ளை உள்ளது. ஒவ்வொரு டீலரும் மூன்று நாட்களுக்கு உரிய ஸ்டாக் எப்போதும் வைத்திருப்பார்கள்.

 

நாளை பெட்ரோல் இருக்காது என்பது பொதுமக்களின் கருத்துதான், ஆனால் எந்த தட்டுப்பாடு இல்லை. அதிக அளவில் பொதுமக்கள் கேனில் பெட்ரோல் வாங்கி வருகின்றனர். இது அபாயகரமானது என்று தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் முரளி பேசும்போது, “சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோல் கிடைக்கும். தமிழகம் முழுவதும் 7000 பெட்ரோல் பங்குகள் உள்ளன.

 

எங்கும் தட்டுப்பாடு கிடையாது. பொதுமக்கள் அதிக அளவில் பெட்ரோல் வாங்கி வருவது செயற்கை தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும். வணிக எரிவாயு சிலிண்டர் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்தபடியாக பெட்ரோலும் தட்டுப்பாடு வரும் என பொதுமக்கள் இதுபோன்று செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது; இரண்டு மடங்கு அதிகரித்துள்ள காரணத்தினால் செயற்கை பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் விளக்கமளித்தார். ”இதுவரையில் மற்ற நாடுகளில் விலை உயர்த்திய போதும் இந்தியாவில் எந்த விலை உயர்வும் இல்லை. பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; பொதுமக்கள் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம். சிலர் செய்வதை பார்த்து பலர் அதுபோன்று பெட்ரோல் பங்கிற்கு வருகின்றனர்.

 

நூறு ரூபாய்க்கு வழக்கமாக பெட்ரோல் போடுபவர் 400 ரூபாய்க்கு போடுகிறார். 10 லிட்டர் பெட்ரோல் போடுபவர் டேங்க் பில் செய்கின்றார். இதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு 90 நாட்களுக்கு இருப்பு உள்ளதாக கூறியுள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் 21 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் கையிருப்பு உள்ளது” என முரளி தெரிவித்தார்.

Right Menu Icon