தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரும்..!
தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக, நாளை மறுநாள் முதல் 9 ஆம் தேதி வரை மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், வரும் 10 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன், இந்த ஆண்டு கோடை வெயில் அதிகரித்து காணப்படும் என்று தெரிவித்தார்.
மௌசம் (MAUSAM) செயலி மூலம் மின்னல் தாக்கம் குறித்து முன்கூட்டியே அறிந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்றும் ரவிச்சந்திரன் கூறினார்.





