ம.தி.மு.க தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்: வைகோ
தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதன் மூலம் கூட்டணி மேலும் வலுப்பெற்றிருப்பதாகவும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் பாரதிய ஜனதா கட்சியால் இங்கு கால் பதிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
எதிர்வரும் தேர்தலில் ம.தி.மு.க தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்பதை உறுதிபடத் தெரிவித்த வைகோ, தமக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏதும் கிடையாது என்றும் கூறினார். இண்டியா கூட்டணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும் என்று மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குரல்கள் எழுவது திமுகவிற்கும், கூட்டணியில் இருக்கும் தங்களுக்கும் பெருமை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
தி.மு.க கூட்டணியைக் கண்டு எதிர்த்தரப்பில் இருப்பவர்கள் கலகலத்துப் போயிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் கட்சிக்குள் எழும் பல்வேறு கருத்துகளுக்குப் பதில் சொல்ல முடியாது என்றார். மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, திரைப்படங்களைப் பார்த்து சில இளைஞர்கள் அவர் பின்னால் செல்கிறார்கள் என்றும், ஆனால் அது தேர்தல் முடிவுகளில் எந்தவித தாக்கத்தையோ அல்லது வெற்றியையோ நிச்சயம் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.





