திமுக உடனான தேமுதிக கூட்டணியை கேப்டன் ஆன்மா மன்னிக்காது : பாஜக
சட்டமன்ற தேர்தலில் திமுக உடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில் திமுக உடனான கூட்டணி கேப்டன் ஆன்மா மன்னிக்காது என தமிழ்நாடு பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணயில் இடம்பெற்றிருந்த தேமுதிக, சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில், சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்,தேமுதிக திமுக இன்றுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எங்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த கூட்டணியை அமைத்துள்ளேன். 2016 இந்த கூட்டணி அமைய வேண்டி இருந்தது 10 வருடம் கழித்து இந்த கூட்டணி உறுதி ஆகி இருக்கிறது.
எத்தனை எண்களில் தேமுதிக போட்டியிடுகிறது, யார் வேட்பாளர், எந்த தொகுதி என்றெல்லாம் குழு அமைத்து அந்த குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முடிவு செய்யப்படும். ராஜ்யசபா சீட் உள்ளிட்ட அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றார்.
இந்நிலையில், விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கி இருக்கும் தங்களது நல்வரவு மற்றும் நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்கு பங்களிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுக ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம் என்று மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக உடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில் தமிழக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில், தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது! என்று பதிவிட்டுள்ளது.





