காதர்பேட்டையில் தினேஷ்குமார் பிரசாரம்… திருப்பூரின் வளர்ச்சிக்காக வாக்குறுதி!
திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார், தனது தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற காதர்பேட்டை பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தார்.
இப்பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு கூடியிருந்த இஸ்லாமியப் பெருமக்களிடம் நல்லாசி பெற்றார். சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதிலும் திமுக அரசு எப்போதும் அரணாகத் திகழும் என்பதை அவர் இந்தச் சந்திப்பின் மூலம் உறுதிப்படுத்தினார். மக்களின் பேராதரவுடன் இந்தப் பயணம் ஒரு பெரும் எழுச்சிப் பேரணியாகவே மாறியது.

தொடர்ந்து, ஆசியாவிலேயே புகழ்பெற்ற காதர்பேட்டை பனியன் சந்தைப் பகுதிக்குச் சென்ற அவர், அங்கிருந்த சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, திராவிட மாடல் அரசின் கடந்த கால சாதனைகளை அவர் பட்டியலிட்டார். குறிப்பாக, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற புரட்சிகரமான திட்டங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை அவர் விளக்கிக் கூறினார்.





