--- --:--:-- --

தவெக தலைவர் விஜயின் வாழ்த்துச் செய்தியால் மீண்டும் பேசுபொருளாகும் தமிழ்ப் புத்தாண்டு!

2

வெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்தோடு சேர்த்து, ‘தமிழ்ப் புத்தாண்டு’ வாழ்த்தையும் தெரிவித்தது தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி, தமிழக அரசியலில் ஒரு நீண்டகால விவாதத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்” என்று வாழ்த்தியுள்ளார். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் தனது பதிவின் இறுதியில் “வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொங்கலோடு சேர்த்து ‘தமிழ்ப் புத்தாண்டு’ வாழ்த்தையும் அவர் தை முதல் நாளிலேயே தெரிவித்ததுதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக ‘தை முதல்நாளே’ தமிழ்ப்புத்தாண்டு என்று பல்வேறு தமிழறிஞர்கள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஆராய்ந்து கூறிவருகின்றனர். குறிப்பாக 1921-ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில் திரண்ட 500-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், ‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’ என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இதன் அடிப்படையில், 2008-ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, ‘தை 1-ஐ தமிழ்ப் புத்தாண்டு’ எனச் சட்டப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பின் அது மாற்றப்பட்டது. 2011-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, சித்திரை 1-தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் விஜய் தனது கட்சியைத் தொடங்கிய பிறகு வரும் முதல் பொங்கல் இதுவாகும். அவர் தனது கட்சிப் பாடலிலும் கொள்கைப் பிரகடனத்திலும் ‘தமிழ் தேசியம்’ மற்றும் ‘திராவிடச் சிந்தனை’களின் கலவையாகத் தன்னை முன்னிறுத்தி வருகிறார்.
தை முதல் நாளைப் புத்தாண்டாக வாழ்த்துவதன் மூலம், அவர் தமிழறிஞர்கள் மற்றும் திராவிட இயக்கங்கள் முன்வைக்கும் “தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்ற சித்தாந்தத்தை ஆதரிப்பதை உணர்த்தியுள்ளார்.
Right Menu Icon