குப்பைக் கிடங்கு விவகாரம் – போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது
திருப்பூர் மாநகரில் சேரும் குப்பையை இடுவாய், சின்னகாளிபாளையம் கிராமத்தில் கொட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. கட்டுப்பாடுகளுடன் கொட்ட, கோர்ட் அனுமதி வழங்கியது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் சுமார் 750 டன் குப்பைகளை நெருப்பெரிச்சல் மற்றும் முதலிபாளையம் பகுதிகளில் உள்ள பழைய பாறைக்குழிகளில் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, சின்னகாளிபாளையம் பகுதியில் குப்பைகளைத் தரம் பிரித்துக் கொட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை மாநகராட்சி லாரிகள் குப்பைகளை ஏற்றி வந்தபோது, இடுவாய், சின்னகாளிபாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் லாரிகளைச் சிறைபிடித்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின்போது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட மோதலில், இருதரப்பிலும் தலா 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
குப்பை கொட்டும் முடிவை ரத்து செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்தும் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, மாநகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தார். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




