2 நாள் பயணமாக சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
இரண்டு நாள் பயணமாக, ஈரோடு, சேலம் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புறப்படுகிறார். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தொடர் சுற்றுப்பயணங்கள், நிர்வாகிகளுடன் சந்திப்பு உள்ளிட்டவற்றில் முதலமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார். இதன்படி, மேற்கு மண்டலத்துக்கு இன்று புறப்படவுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள அவர், மாலை 5 மணிக்கு சேலம் செல்கிறார்.
சேலத்தில் 11 கிலோ மீட்டர் தூரம் பேரணியாகச் சென்று பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறவுள்ளார். மேலும் நாளை காலை 9.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார்.
பின்னர் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். இவை அனைத்தையும் முடித்துக் கொண்டு நாளை மாலை சேலத்தில் இருந்து சென்னைக்குத் திரும்பவுள்ளார்.
இந்த மாதத்தின் 3ஆவது வாரத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் தனித்தனியாக சந்திக்கவும் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, மேட்டூர் அணை திறப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




