--- --:--:-- --

27 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

5

மிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள், திருச்சி மாநகராட்சி ஆணையர் உட்பட 27 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் தலைவராகவும் மேலாண்மை இயக்குநராகவும் இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையராக இருந்த லில்லி, கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் கதர்த்துறைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் (கோ-ஆப்டெக்ஸ்) மேலாண்மை இயக்குநராக இருந்த இன்னசென்ட் திவ்யா, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சந்தரமோகன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையராகப் பொறுப்பேற்கிறார். தமிழ்நாடு மினரல்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த சரவணவேல்ராஜ், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையராகவும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் (ஆவின்) மேலாண்மை இயக்குநராகவும் அஜய் யாதவ் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

குடிமைப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி) இருந்த சிவானந்தம், நிதித்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குநராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

தமிழ்நாடு மினரல்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் ராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் பொறுப்பையும் தொடர்ந்து கூடுதலாகக் கவனிப்பார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநராக இருந்த மோகன், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை இணை ஆணையராக இருந்த ஷ்ரேயா பி.சிங், பள்ளிக்கல்வித்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை இணைச் செயலாளராக இருந்த ராஜா கோபால் சுங்கரா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சரண்யா அரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொன்னேரி சார் ஆட்சியராக இருந்த அப்துல் ரஸீக், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நல்லசிவன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிக்குமார், வேளாண்மை-உழவர் நலத்துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 

 

ஊட்டி சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்த சங்கீதா, கோவை வணிகவரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநராக இருந்த ஜெயசீலன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த சுகபுத்ரா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநராகப் பொறுப்பேற்கிறார். கோவை வணிகவரித் துறை இணை ஆணையராக இருந்த தாக்கரே சுபம் ஞானதேவராவ், பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வீர பிரதாப் சிங், சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த பொன்மணி, திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சிப்காட் செயல் இயக்குநராக இருந்த கேத்தரின் சரண்யா, வேலூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்து சமய அறநிலையத்துறை தற்போது மீண்டும் தனித் துறையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்பு சுற்றுலாத்துறையுடன் இணைந்திருந்த இத்துறை, த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு வணிக வரித்துறையுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அத்துறை தனித்துறை ஆக இயங்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செய்தித்துறை செயலாளராக உள்ள ராஜாராமன், இந்து சமய அறநிலையத்துறையை கூடுதலாகக் கவனிப்பார் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon