நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்.பி பதில்..!
தமிழுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் போராடுவது ஏளனத்திற்கு உரியதா? என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
சென்னையில் தனியார் கல்லூரியில் நேற்று நடந்த மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு தரும் ஊக்கத் தொகையில், 25 சதவீதம் தமிழ்நாட்டுக்குத்தான் கிடைக்கிறது என்றார்.
ஜன்தன் திட்டத்தில் ஒரு கோடியே 70 லட்சம் பேருக்கு கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் 59 லட்சம் வீடுகளுக்கு கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 89 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மக்கள் மருந்தகம் மூலம் 40 சதவீத சலுகையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், 79 லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டார்.
தொடர்ந்து மத்திய அரசுக்கு தமிழ்நாடு அதிக வரி கொடுக்கும் போதும், தமிழ்நாட்டுக்கு குறைந்த நிதியையே மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது என்ற குற்றச்சாட்டுக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது ”நாங்கள் இவ்ளோ பணம் கொடுக்கிறோம்; நீங்க என்ன கொடுக்கிறீர்கள்” என்ற வாதமே தவறு.
உதாரணமாக சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டில் கோவை, சென்னையில் இருப்பவர்கள்தான் வரி கொடுக்கிறார்கள். அரியலூரில் இருப்பவர்களிலும் கோவில்பட்டியில் இருப்பவர்களால் வரிவருவாய் இல்லை என்பதற்காக அவர்களுக்கு எதுவும் செய்யக்கூடாது என சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார். மத்திய அரசில் அதுபோல பாலிசி மத்திய அரசிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் போராடுவது ஏளனத்திற்கு உரியதா? என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதை இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என கூறியுள்ளார்.





