நடிகர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு..!
நடிகர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஓராண்டுக்கு முன் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து பணியாற்றி வருகிறார்.
விக்கிரவாண்டியில் மாநில அளவிலான மாநாடு ஒன்றை நடத்தி இருந்தாலும், மற்றபடி நேரடியாக களத்திற்கு வரவில்லை என்ற விமர்சனப் பார்வையும் விஜய் மீது முன்வைக்கப்படுகிறது. எனினும் முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் விஜய், நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
கட்சி உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் அதேவேளையில், தேர்தல் வியூகங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தவெக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த ஆயத்தமாகி வருகிறார்.இந்நிலையில், நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்.
Y பிரிவில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு அதிகாரிகள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 காவலர்கள் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். தமிழகத்திற்ககுள் இந்த பாதுகாப்பு விஜய்க்கு வழங்கப்படும். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.





