தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைப் பணிகள் இன்று தொடக்கம்..!
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 9 ஆயிரத்து 200 இடங்களும், பல் மருத்துவப் படிப்பில் 2 ஆயிரத்து 150 இடங்களும் உள்ளன. இதில், பொதுப் பிரிவில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் இன்று காலை 10 மணிமுதல், வரும் 27-ஆம் தேதி மாலை 5 மணிவரை, ஆன்லைன் மூலமாக கலந்தாய்வில் பங்கேற்று, தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவுசெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 10 மணிமுதல் www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலமாக தரவரிசை ஒன்று முதல் 28 ஆயிரத்து 819 வரையில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவுசெய்யலாம்.
அதாவது, பொதுப் பிரிவில் நீட் தேர்வு மதிப்பெண்கள் 720 முதல் 127 வரையில் பெற்றுள்ளவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் 715 முதல் 127 வரையில் பெற்றுள்ளவர்களும் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை 27ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.
28ஆம் தேதி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 29ஆம் தேதி தற்காலிக முடிவுகள் வெளியிடப்பட்டு, 30 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணைகள் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அரசு பள்ளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நாளை நடைபெற உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




