நடிகர் விஜய் நடத்தும் பாராட்டு விழா..மாணவர்களுக்கு இன்று ஊக்கத்தொகை..!
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நடிகர் விஜய் நடத்தும் பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. கட்சி தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் மாணவர் சந்திப்பு என்பதால் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதை கடந்த ஆண்டு நடிகர் விஜய் தொடங்கினார். அப்போதே, அரசியலுக்கு விஜய் ஆயத்தமாகிவிட்டார் என பேசப்பட்ட நிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் விஜய் தொடங்கிவிட்டார்.
இந்நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் அதிக மதிபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்றும், ஜூலை 3-ஆம் தேதியும் என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.
அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்றைய விழாவில் பங்கேற்கின்றனர்.
வெளியூரில் இருந்து வந்து செல்பவர்களுக்காக, கட்சி நிர்வாகிகளே வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புகைப்படத்துடன் கூடிய பாஸ் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும், மாணவ, மாணவியருடன் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும்,செல்போன், பேப்பர், பேனா ஆகியவற்றை அரங்கிற்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவாக சாதம், கதம்ப சாம்பார், வத்தக்குழம்பு, தக்காளி ரசம், மோர், உருளை காரக்கறி, அவரை மணிலா பொரியல், அவியல், இஞ்சி துவையல், ஆனியன் மணிலா, தயிர் பச்சடி, அப்பளம், வடை, வெற்றிலை பாயாசம் ஆகியவை இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியை மாலை 6 மணிக்கு முன்பாக முடிக்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கின்றனர்.ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் பொன்னாடை போர்த்தி, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து தெரிவிக்கவுள்ளார். காலை 10 மணி அளவில் மாணவர்களிடையே 10 நிமிடம் விஜய் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த விழாவில் அம்பேத்கரையும், பெரியாரையும் படியுங்கள் என மாணவர்களுக்கு விஜய் அறிவுரை வழங்கிய நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் மாணவர் சந்திப்பில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





