இன்று வெப்ப அலை வீசும் – வானிலை மையம் எச்சரிக்கை
வட தமிழ்நாடு மற்றும் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நேற்று 15 இடங்களில் வெயில் சதமடித்தது. இதில், அதிகபட்சமாக சேலத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது, தகிக்கும் வெயிலால் ஏராளமானோர் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஈரோட்டில் 107 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும், கரூர் பரமத்தி, திருப்பத்தூர், வேலூரில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. இதேபோன்று, மதுரை, தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருத்தணி, கோவை, நெல்லை, தஞ்சாவூர் மற்றும் சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் வரும் 27-ஆம் தேதி வரை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் முதல் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயிலின் தாக்கம் பதிவாகும் எனவும் குறிப்பாக, வட தமிழ்நாடு மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இன்று வெப்ப அலை வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று நாமக்கல், சேலம், வேலூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.





