--- --:--:-- --

சிதம்பரத்தில் சிறுத்தையின் ராஜ்ஜியம்? வெளியூர் வேட்பாளரால் பாஜகவுக்கு சறுக்கல்… 3ஆம் இடத்திற்கு முட்டி மோதும் அதிமுக!

29

மிழகத்தின் ஸ்டார் வேல்யூ தொகுதிகளில் ஒன்று சிதம்பரம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இம்முறை வெற்றி பெற்று 3ஆவது முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்வாரா திருமாவளவன்?

 

அதற்கு முன்பாக, தொகுதியின் பின்னணியை பார்க்கலாம். கடலூர் மாவட்டத்தின் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், அரியலூர் மாவட்டத்தின் அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளையும், பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் தொகுதியையும் இணைத்து 2009-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தொகுதி தான் சிதம்பரம் தனித் தொகுதி.

 

சிதம்பரம் தொகுதியில் விவசாயமே பிரதானமாகும். நெல், கரும்பு, முந்திரி, சோளம், பருத்தி, மிளகாய் ஆகிய பயிர்கள் அதிக அளவில் விளைகின்றன. சிமென்ட் தொழிற்சாலைகள், தனியார் கரும்பாலை ஆகியவை இந்தத் தொகுதியில் உள்ளன. இதைத் தவிர குறிப்பிட்டு சொல்லும்படி தொகுதியின் மேம்பாட்டிற்கு எதுவும் இல்லை என்றே கூறலாம்.

 

அதே நேரம் சுற்றுலா, ஆன்மிகத் தலங்கள் உள்ளன. சிதம்பரம் என்றாலே தில்லை ஸ்ரீநடராஜர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம், பிச்சாவரம் சுற்றுலா மையம், வீராணம் ஏரி என்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன.

 

சிதம்பரம் (தனி) தொகுதியில் நடைபெற்ற 16 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும், அதிமுக 2 முறையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 முறையும் வென்றுள்ளன. இந்த தொகுதியானது, 1957-ல் ‘இரட்டை உறுப்பினர்’ தொகுதியாக இருந்தது. 1984, 1989. 1991 ஆகிய 3 முறையும் காங்கிரஸ்,1996-ல் திமுக, 1998-ல் பாமகவைச் சேர்ந்த தலித் எழில்மலை, 1999, 2004-ல் பாமகவைச் சேர்ந்த இ.பொன்னுசாமி, 2009-ல் விசிக தலைவர் திருமாவளவன், 2014-ல் அதிமுகவைச் சேர்ந்த மா.சந்திரகாசி ஆகியோர் வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலில், திருமாவளவன் வெற்றி பெற்று சிட்டிங் எம்.பியாக இருக்கிறார்.

 

சிதம்பரம் தொகுதியில் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமே இருந்துள்ளது. இருப்பினும் காலம் செல்லச்செல்ல திமுக, அதிமுகவுக்கு கணிசமான வாக்கு வாங்கியைப் பெற்றன. இதுதவிர பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கும் சிதம்பரம் தொகுதியில் கணிசமான செல்வாக்கு உள்ளது.

 

2024இல் சிதம்பரம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,10,915

 

ஆண் வாக்காளர்கள்: 7,49,623
பெண் வாக்காளர்கள்: 7,61,206
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 86

 

இம்முறை சிதம்பரம் தொகுதியில், திமுக கூட்டணியில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சந்திரகாசன், பாஜக சார்பில் காத்யாயினி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜான்சி ராணி ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

 

சிதம்பரம் தொகுதியில் 2 முறை எம்.பி.ஆக இருந்தும் தொகுதியின் வளர்ச்சிக்கு திருமாவளவன் எதையும் செய்யவில்லை என்ற குறைபாடு தொகுதி மக்கள் மத்தியில் இருப்பதை பரவலாக காணமுடிகிறது. எம்.பி. ஆகி கட்சியை வளர்த்த அளவுக்கு தொகுதியையும் கொஞ்சம் திருமாவளவன் கவனித்திருக்கலாம் என்று திமுகவினரே முணுமுணுக்கும் நிலை உள்ளது.

 

தண்ணீர் பிரச்சனை, சாலை வசதி, வேலையின்மை போன்ற பல பிரச்சனைகள் சிதம்பரத்தில் நிலவுகிறது. அதே நேரம், திமுகவின் பலம், வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி இருப்பது, எதிரணி வேட்பாளர்களின் பலவீனம் போன்றவற்றால் தொகுதியில் திருமாவளவனின் கையே ஓங்கி இருக்கிறது.

 

இந்த தொகுதியில் பாஜக சார்பில் வெளியூர் வேட்பாளர் காத்யாயினீ களமிறங்கி உள்ளார். ஆனால், உள்ளூரில் செல்வாக்குடன் இருந்த தடா பெரியசாமிக்கு பாஜக வாய்ப்பு தரவில்லை; இதனால் அவர் கட்சியில் இருந்து வெளியேறியது பாஜகவுக்கு சறுக்கலாக அமைந்துவிட்டது. பாஜக இங்கு போட்டியிடாமல், தொகுதியில் கணிசமான செல்வாக்குள்ள பாமக இங்கு போட்டியிட்டிருந்தால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதை அக்கட்சியினரே ஒப்புக் கொள்கின்றனர்.

 

இங்கு அதிமுக சார்பில் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவர், பெரம்பலூர் மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளராக உள்ளார். வேளாண்மை துறையில் பணியாற்றிய இவர், கட்சிப் பணிக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்தவர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவரது மனைவி அம்பிகா சந்திரகாசன், அரியலூர் மாவட்ட கவுன்சிலராக, தமிழக அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

கிராமப்புறங்களில் இரட்டை இலைக்கு செல்வாக்கு உள்ள போதும், வலுவான போட்டியால் சிதம்பரம் தொகுதியில் அதிமுக 3ஆம் இடத்தையே பிடிக்கும் என்பது கண்கூடாகத் தெரிகிறது. பாஜகவுடன் ஒருவேளை அதிமுக கூட்டணி அமைத்திருந்தால், எளிதாக பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்; அதில் சிதம்பரமும் ஒன்றாக இருந்திருக்கும். ஆனால், தனித்து போட்டியிடுவதால், இங்கு அதிமுக தான் பெரிய இழப்பை சந்திக்கும் என்று தெரிகிறது.

 

மொத்தத்தில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாஜக இடையே தான் பிரதான போட்டி நிலவுகிறது. இதில் திமுகவின் பலத்தால் எளிதாக திருமாவளவன் வெற்றி பெறுவார், நாடாளுமன்றத்தில் சிறுத்தையின் குரல் ஒலிக்கும் என்பதே கள நிலவரமாக உள்ளது.

 

Right Menu Icon