தேர்தலை ஒட்டி சென்னையிலிருந்து கோவை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் வரும் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்காக சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. வெளியூரில் தங்கி பணியாற்றுவோர் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்வார்கள். அவர்களிள் வசதிக்காக சென்னையில் இருந்து 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் இரண்டாயிரத்து 92 பேருந்துகளுடன் கூடுதலாக இரண்டாயிரத்து 970 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மொத்தம் 7 ஆயிரத்து 154 பேருந்துகள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன. மேலும், பிற ஊர்களில் இருந்தும் மூவாயிரத்து 60 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலை ஒட்டி தென் மாவட்ட மக்களின் வசதிக்காக கன்னியாகுமரிக்கும், கோவைக்கும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை காலை 4.40 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும், இதே போல் சனிக்கிழமை மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.40 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
இந்த ரயில் மறுமார்க்கத்தில் வாக்குப்பதிவு நாளான இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு, சனிக்கிழமை காலை 9.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும், இதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு புறப்படும் இதே ரயிலின் மற்றொரு சேவை, திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
சென்னையில் இருந்து கோவைக்கும் வரும் வியாழக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் முறையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.20 மணிக்கு சென்றடைய இருக்கிறது.
மறு மார்கத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நாளான வெள்ளிக்கிழமை இரவு 8.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில், சனிக்கிழமை காலை 10.05 மணிக்கு எழும்பூரை வந்தடைய இருக்கிறது. இதே ரயில் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை 10.05 மணிக்கு எழும்பூரை வந்தடைய இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




