திமுகவின் விண்ணப்ப மனு நிராகரிப்பு.. ஆர்.எஸ்.பாரதி எடுத்த முடிவு..!
தேர்தல் விளம்பரங்கள் செய்ய அனுமதி மறுத்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தேர்தல் விளம்பரங்கள் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படையில் திமுகவின் விளம்பரங்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்ப மனு கொடுத்ததாகவும் அதனை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து விட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தங்களது விண்ணப்ப மனுவை இரண்டு நாட்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தில் உத்தரவிட வேண்டும் என்றும் அதேவேளையில் விண்ணப்ப மனுவை நிராகரிப்பதாக இருந்தால் அதற்கான முழுமையான காரணங்களை குறிப்பிட வேண்டும் என்றும் தனது மனுவில் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இந்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா புருவாலா, சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.





