மொட்டை மாடியில் சிதறி கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்..!
வேலூர் மாவட்டத்தில் நடராஜர் என்பவரின் வீட்டின் மொட்டை மாடியில் ஏறி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 7 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கே.வி.குப்பம் அருகே காந்தப்பம் பகுதியில் நடராஜர் என்பவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் நடராஜன் வீட்டை சோதனையிட இரவு சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திறக்கப்படவில்லை. இதனால் மொட்டை மாடியில் ஏறி சோதனை செய்தனர். அப்பொழுது மாடியில் 500 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்துள்ளன.
அவற்றை சேகரித்ததில் சுமார் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து வீட்டிற்குள் இருந்த அதிகாரிகள் பீரோவை சோதனையிட்டதில் மேலும் 5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணை நடத்திய அதிகாரிகளிடம் வீட்டில் இருந்த வயதான தம்பதியினரான நடராஜன் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தங்களது என தெரிவித்தனர். ஆனாலும் ஆவணம் எதுவும் இல்லாததால் 7 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.





