குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் – பா.ம.க. தேர்தல் அறிக்கை
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதன்கிழமை வெளிட்டார்.
2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்; வெற்றிபெறும்.
உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும்.
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நீக்கப்படும்.
கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.அரசுத் துறை, பொதுத் துறை பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.
தனியார் துறை, நீதித் துறை ஆகியவற்றிலும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படும். மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.
தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கவும், அவர்களை தனிப் பிரிவாக்கி இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இடைநிலைப் பணிகளில் 50 விழுக்காடும், கடைநிலைப் பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டுவரப்படும்.
மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களுக்கு தன்னாட்சி குறித்து ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் புதிய ஆணையம் அமைக்க பா.ம.க. வலியுறுத்தும்.
நெருக்கடி நிலைக் காலத்தின்போது, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்குப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்று பா.ம.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.





