75 வது குடியரசு தின விழா: டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்
75வது குடியரசு தின விழா விழாவையொட்டி, தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை பறக்கவிட்டார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
கடமைப் பாதையில் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் தொடங்கிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக, டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் அங்கிருந்த குறிப்பேட்டில் தனது அஞ்சலிக் குறிப்பினை பதிவிட்டார். தொடர்ந்து அங்கிருந்து குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் கடமைப் பாதைக்கு சென்றார்.
குடியரசு தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வண்ணமயமான தலைப்பாகையுடன் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தார். பிரதமரைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் அவரது மனைவியுடன் விழாவுக்கு வருகை தந்தார்.
75வது குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக பங்கேற்க வருகை தந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தன்னுடன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.





