ரேஷனில் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் 5 மாதங்கள் நீட்டிப்பு..!
ஏழை, எளிய மக்களுக்கு ரேஷனில் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரண்டாவது கட்ட பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நாட்டு மக்களுக்கு தொலைக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்.
ஏழைகள் நலனுக்காக பிரதமரின் திட்டத்தின் கீழ் இலவச உணவு பொருட்கள் வழங்கப்படுவது நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மோடி அப்போது அறிவித்தார். 5 கிலோ அரிசி, அல்லது 5 கிலோ கோதுமை மற்றும் ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் என அவர் கூறினா.ர் இதன் கீழ் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என கூறிய பிரதமர் இந்த திட்டத்திற்காக அரசுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என தெரிவித்தார்.
நேர்மையாக வரி செலுத்துவோர் மற்றும் விவசாயிகளால் தான் இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்த முடிவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். யாரும் பசியுடன் இருக்க கூடாது என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் என அவர் கூறினார். ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் இந்த தருணத்தில் மக்களுக்கு உதவிகரமாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொது முடக்க பாதிப்புகளை சமாளிக்க 20 கோடி ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்கில் 31 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் மோடி தெரிவித்தார். பருவநிலை மாற்றம் தொடங்கியுள்ள சூழலில் மக்கள் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இரண்டாம் கட்ட பொது முடக்கம் தளர்வுகள் தொடங்கியுள்ள இந்த தருணத்தில் பலர் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டு விதிமுறைகளை மீறி வருவதாக வரும் தகவல்கள் கவலை தருவதாகவும் அவர் தெரிவித்தார். சட்டத்தையும், விதிகளையும் மீறுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என மோடி தெரிவித்தார்.
பிரதமர் உட்பட யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் கொரொனா இறப்பு விகிதம் கட்டுக்குள் இருந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி உலகப் பெருந் தொகையை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைவிட நம் நாடு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.






