பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக பல்வேறு கோரிக்கைகளை வைத்த முதல்வர் விஜய்!
பிரதமர் நரேந்திர மோடி, பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில், சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்கள் அடிக்கல் நாட்டுதல், முடிந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்காக இன்று சென்னை வந்தார். இன்று காலை 11 மணி அளவில் சென்னை வந்த பிரதமர் மோடி, ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது பாஜகவினர் இரு பக்கமும் திரண்டு நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பை கொடுத்தனர்.
இதனை ஏற்ற பிரதமர் மோடி, சுமார் 11.30 மணி அளவில் சென்னை போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நண்பகல் 12.15 மணி அளவில் சென்னை ஐஐடி அருகே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, பிற்பகல் 1.30 மணி அளவில் கிண்டி வித்யாலயா மைதானத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், பங்கேற்று சுமார் ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடிக்கு வைத்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது; “அனைவருக்குமான அரசாக நம்முடைய அரசு உள்ளது. கல்வி, வேளாண்மை, திருநர் நலன் என ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனை இலக்காகக் கொண்டு அனைத்து தரப்பினருக்கான அரசாக நமது அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தமிழகம் என்றைக்கும் துணையாக நிற்கும்.
ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும் போது அதன் பலன் நேரடியாக மக்கள் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை. சென்னையின் வளர்ச்சி மட்டுமல்லாமல் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் வளர்ச்சியை கொண்டு சேர்க்க வேண்டும். இளைஞர்கள் பெரும் வரம் அவர்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக திட்டங்கள் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்த முதலமைச்சர் விஜய், தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளையும் பிரதமர் மோடிக்கு வைத்தார்.
முதலமைச்சர் விஜய் வைத்த கோரிக்கைகள், “நதி நீர் இணைப்பு முதல் பள்ளிக் கல்வி வரை நிலுவையில் உள்ள ரூ. 5 ஆயிரம் கோடி நிதியை விடுவிக்க வேண்டும். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும். அதாவது, தமிழ்நாடு – கர்நாடகாவை இணைக்கும் ஓசூர் – பொம்மசந்திராவுக்கு இடையே மெட்ரோ திட்டம் தேவை. இதன் மூலம் தொழில் வளர்ச்சி மேம்படும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும். சென்னை மெட்ரோவின் 3ஆம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





