--- --:--:-- --

ரூ.40 லட்சத்தில் சீரமைக்கப்படும் பாலாற்றுப் பாலம்

7

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு அருகே பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள பழமையான பாலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சீரமைப்புப் பணிகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ளவும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியமாகியுள்ளது.

 

 

செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் மற்றும் இருங்குன்றப்பள்ளி இடையே பாலாற்றின் குறுக்கே இந்தப் பாலம் அமைந்துள்ளது. சுமார் ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலம், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்திற்கு முக்கிய இணைப்பாக இருந்து வருகிறது. கடந்த 1955-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான கார்கள், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

 

 

இந்தப் பாலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாலத்தின் மேற்பரப்பில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதுடன், சில இடங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

 

பாலத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் உள்ள மூன்று பாலங்களைச் சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பாலாற்றுப் பாலத்தின் தூண்கள், உயர்மட்டப் பாலத்தின் அடிப்பகுதி உள்ளிட்ட பகுதிகளைப் பலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சாலையின் சேதமடைந்த பகுதிகளையும் சீரமைத்து, வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

 

 

சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், பாலத்தின் இருபுறங்களிலும் வாகனப் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு தனித்தனியாக மாற்றுப்பாதைகளை ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது, சென்னை நோக்கிச் செல்லும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் படாளம் மற்றும் பூக்கத்துறை சந்திப்புகளில் இருந்து பழைய சீயாறு வழியாகத் திருப்பிவிடப்பட உள்ளன. கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மெய்யூர், பிலாப்பூர், பழத்தோட்டம், காஞ்சிபுரம் சாலை வழியாகச் செங்கல்பட்டைச் சென்றடையலாம்.

 

 

மேலும், கருங்குழி, திருக்கழுக்குன்றம், கேளம்பாக்கம் வழியாகவும் சென்னை நோக்கிப் பயணிக்க மாற்றுப்பாதை உள்ளது. எனவே, இந்தச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் போக்குவரத்துக் காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். சீரமைப்புப் பணிகள் முடியும் வரை மாற்றுப்பாதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலையும் தேவையற்ற காலதாமதத்தையும் தவிர்க்கலாம்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon