மேகதாது அணையில் ஒரு செங்கல்கூட வைக்க தமிழக அரசு அனுமதிக்காது – அமைச்சர் நிர்மல்குமார்
மேகதாது அணை விவகாரத்தில் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு செங்கல் கூட வைக்க தமிழக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் கடுமையான எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்தில் சேதமடைந்து மறுசீரமைக்கப்பட்ட மின் உற்பத்தி அலகு ஒன்றின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்து ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல் குமார், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-“மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு செங்கல் கூட வைக்க தமிழக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். கர்நாடக அரசு என்ன முயற்சி மேற்கொண்டாலும் அதை எதிர்த்து தமிழக அரசு கடுமையான எதிர்வினையாற்றும்.
இந்த விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயம் உள்ளிட்ட உரிய சட்ட அமைப்புகளிடமும், உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு முறையிட்டுள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு எந்தவிதமான அனுமதியும் வழங்காது என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் வரும்போதெல்லாம் காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரங்களை முன்வைத்து அரசியல் பேசுவது வழக்கமாக உள்ளது. ஆனால் மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது. அத்தகைய முயற்சியில் ஈடுபட்டால் மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என கூறினார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X





