--- --:--:-- --

திருச்சியில் ரூ.22.20 கோடி மதிப்பிலான ரேஷன் அரிசி முறைகேடு!

9

திருச்சி மாவட்டத்தில் அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசியை முறைகேடாகக் கையாடல் செய்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக அரிசி ஆலை உரிமையாளர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டின் மூலம் அரசுக்கு ரூ.22.20 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மருது செட்டியார் என்பவரின் மகன் சண்முகம் (57) என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ குமரன் மாடர்ன் ரைஸ் மில் என்ற அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை கடந்த 27.10.2022 முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரிசி அரைக்கும் முகவராகச் செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், அரசிடம் இருந்து நெல் பெற்று, அதை அரிசியாக மாற்றி மீண்டும் நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளது.

 

 

அந்த வகையில், 2026ஆம் ஆண்டு முதல் இந்த அரிசி ஆலைக்கு சுமார் 3,710 மெட்ரிக் டன் நெல் வழங்கப்பட்டுள்ளது. அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக இந்த நெல்லை அரிசியாக மாற்றி ஒப்படைக்க வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையாகும். மேலும், நெல் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் அதற்குரிய அரிசியை நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

 

 

 

ஆனால், ஒப்பந்த விதிமுறைகளின்படி அரிசி ஒப்படைக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக கடந்த செப்டம்பர் 9 மற்றும் அக்டோபர் 10 ஆகிய தேதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசால் வழங்கப்பட்ட நெல்லுக்கு இணையான அரிசி நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதும், சம்பந்தப்பட்ட அரிசி ஆலையின் இருப்பிலும் அந்த அரிசி இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.

 

 

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அரிசி ஆலை உரிமையாளர் சண்முகம், அவரது மனைவியும் ஒப்பந்த உரிமதாரருமான வனிதா (47), மகன் சி. ரெங்கராஜன் (26) ஆகிய மூவரும் இணைந்து திட்டமிட்டு அரசு நெல் மற்றும் அரிசியை முறைகேடாகக் கையாடல் செய்ததாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட வேண்டிய அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

 

இந்த முறைகேட்டின் காரணமாக அரசுக்கு ரூ.22,20,24,916 இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.22 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 916 மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திருச்சி மண்டல மேலாளர் அளித்த புகாரின் பேரில், மணப்பாறை காவல்துறையினர் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 316(2), 316(5), 318(4) பிரிவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் 7ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

 

இதனைத் தொடர்ந்து, அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட சண்முகம், அவரது மனைவி வனிதா மற்றும் மகன் ரெங்கராஜன் ஆகிய மூவரையும் நவம்பர் 15ஆம் தேதி திருச்சி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

 

அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும் மானிய விலையிலும் வழங்கப்பட வேண்டிய உணவுப் பொருட்கள் முறைகேடாகக் கள்ளச்சந்தைக்கு மாற்றப்பட்டதாக எழுந்துள்ள இந்தப் புகார் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதும், இந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ.22 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதும் கவனம் பெற்றுள்ளது. மேலும், இந்த வழக்கில் காவல்துறையினரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon