தவெக ஆட்சியில் ஒரு புத்தகம்கூட வாங்கவில்லை – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
“முதல்வர் விஜயின் ஆட்சி காலத்தில் ஒரு புத்தகம்கூட இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை” என டெல்லியில் அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்தார். புத்தக ஊழலில் ஈடுபட்டது எந்த அரசியல்வாதியாக இருந்தாலும், அவர் யாருடைய வலக்கரம் இடக்கரமாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்திப்பதற்காக அமைச்சர் ராஜ்மோகன் டெல்லி சென்றார். அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நூலகங்களுக்கு புத்தகம் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏஐ மூலம் திமுக ஊழல் செய்ததாக விமர்சித்தார்.
“ஏ.ஐ. ஊழல் செய்த தி.மு.க.வுக்கு காவல்துறையும், நீதிமன்றமும் ஒரு முடிவை கொண்டுவரும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையின் அடிப்படையில் விசாரணை என்பது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கடந்த திமுக ஆட்சியில் ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. குறிப்பாக அகல் விளக்கு என்ற ஒரு பதிப்பகத்தினால் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள், சர்ச்சைக்குரிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது விசாரணை மேற்கொண்டு நேற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் 1.7 கோடி புத்தகங்கள் இந்த ஒரு பதிப்பகத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகள் முன்பு யார் ஆட்சி இருந்தது? லஞ்ச ஒழிப்புத்துறை ஏழு இடங்களில் சோதனை மேற்கொண்டு பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஒளி விளக்கு புத்தகத்தின் உரிமையாளர் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் எவரையும் நாங்கள் சும்மா விடப்போவதில்லை.
பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் நூலகங்களில் கட்டுமானத்தில்தான் ஊழல் நடைபெற்றது. ஆனால் உலகத்தில் முதல் முறையாக புத்தகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. பெரியாரின் பெயரில் நூலகம் திறந்து ஊழல் செய்திருக்கிறார்கள்.
விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடைபெற்று அனைத்து தரமற்ற புத்தகங்களும் நீக்கப்பட்டு நல்ல புத்தகங்கள் மீண்டும் நூலகத்தில் வைக்கப்படும்.
ஒரு நூலகத்தில் உள்ள பல்வேறு சிறு சிறு நூலகங்களில்கூட இந்த குறிப்பிட்ட பதிப்பகம் தன்னுடைய புத்தகத்தை வைத்திருக்கிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் ஒரு அரசியல் பின்புலம் இல்லாமலோ அல்லது அரசியல்வாதிகளின் துணை இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் எந்தெந்த அரசியல்வாதிகள் பின்புலத்தில் உள்ளார்கள் என்பது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஊழல் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக ஏன் திமுக முறையாக பதில் அளிக்கவில்லை? இது தொடர்பாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏன் பதிலளிக்கவில்லை?
முதல்வர் விஜயின் ஆட்சி காலத்தில் ஒரு புத்தகங்கள் கூட இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை என ராஜ்மோகன் அவர்கள் விளக்கம் அளித்தார். நாங்கள் கொள்முதல் செய்தால் இப்படியான குப்பை புத்தகங்களை கொள்முதல் செய்யவே மாட்டோம். இனிமேல் தமிழ்நாட்டில் புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவோம். தற்பொழுது உள்ள விஷ கிருமிகளை அகற்றிவிட்டு புதிய முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்வோம்.
புத்தகங்களை பரிந்துரைத்த குழு மற்றும் ஒப்புதல் அளித்த குழு ஆகியோர்கள் மீதும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற குப்பையான புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கின்றோம், அனைத்தையும் ஒரு மிகப்பெரிய அரங்கில் காட்சிப்படுத்துவோம். ஏனெனில் இது போன்ற ஒரு ஊழல் எந்த ஒரு மாநிலத்திலும் இதற்கு மேல் நடைபெறக் கூடாது என்பதற்காக நாங்கள் அந்த குப்பையான புத்தகங்களை காட்சிப்படுத்துவோம். புத்தக ஊழலில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும், அவர் யாருடைய வலக்கரம் இடக்கரம் என இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று ராஜ்மோகன் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





