ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தூணாக விளங்குபவருமான எம்.எஸ். தோனி (MS Dhoni), மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் இறங்குவாரா அல்லது ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் சீசன் முன் எழுவது வழக்கம்.
கிரிக்கெட் உலகில் எப்போதும் ஹாட் டாப்பிக்காக இருக்கும் எம்.எஸ். தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்த விவாதங்கள் இந்தாண்டும் மீண்டும் சூடுபிடித்துள்ளன. கடந்த ஐபிஎல் சீசன் தோனி மற்றும் சிஎஸ்கே அணிக்கு மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது. சிஎஸ்கே அணி மூன்றாவது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியதுடன், தோனி தொடர் காயங்களால் அவதிப்பட்டார். சீசனுக்கு முன்பே ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக ஆரம்ப கட்டப் போட்டிகளைத் தவறவிட்ட அவர், பின்னர் ஏற்பட்ட கட்டைவிரல் காயம் காரணமாகப் போட்டிகளில் இருந்து முற்றிலும் விலக நேர்ந்தது.
தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பல அதிரடி முடிவுகளை எடுத்து உலகையே ஆச்சரியப்படுத்தியவர் தோனி. அவரது வயது மற்றும் சமீபத்திய காயங்களைக் கணக்கில் கொண்டு பலர் அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கருதினாலும், தோனிக்கும் சிஎஸ்கே ரசிகர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு என்பது வெறும் கிரிக்கெட் லாஜிக்கிற்கு அப்பாற்பட்டது. தற்போது, ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்களைத் தக்கவைப்பதற்கான காலக்கெடு நெருங்கிவருகிறது.
இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய வீரர். ஒரு புதிய பொறுப்பு. என்றும் நீடிக்கும் பிணைப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘டீம் மென்டார்’ (Team Mentor) பொறுப்பை ஏற்கிறார் மகேந்திர சிங் தோனி.
எண்ணற்ற வெற்றிகள், சவாலான தருணங்கள் மற்றும் நம் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் நினைவுகள் என, நமது பயணத்தின் தொடக்கத்திலிருந்தே அதன் மையப்புள்ளியாக எம்.எஸ். தோனி இருந்து வருகிறார். அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது முதல், அடுத்த தலைமுறை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு வழிகாட்டுவது வரை – ‘தல’ எப்போதும் நமது அடையாளத்தின் ஒரு அங்கமாகவே இருப்பார். சென்னை எப்போதும் அவருக்கு இல்லமாகவே இருக்கும்.” என்று தோனியை தங்கள் அணியின் ஆலோசகராக நியமித்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




