--- --:--:-- --

தனிஷ்க் நகைக்கடை திருட்டு – வசதியாக வாழ்வதற்காக கொள்ளை

7

மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட ‘தனிஷ்க்’ நகைக்கடையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில், இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. இதையடுத்து, முக்கிய குற்றவாளி என்று கூறப்படும் நிஷாந்த், திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6.2 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக 11.384 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டதாக மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி காலம் என்பதால் கட்டட வேலை முடிவதற்கு முன்பே கடை திறக்கப்பட்டதாகவும், நகைக் கடையின் பின்புறம் சி.சி.டி.வி இல்லை. கடையைச் சுற்றிலும் சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்க உத்தரவிடப்படும் என்றும் கூறினார்.கைது செய்யப்பட்ட நிஷாந்த், தந்தை சுரேஷ், தோழி மீனாட்சி உள்ளிட்டோரை விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

 

 

கொள்ளைக்கு முன் 2 முறை, நகைக் கடைக்கு வந்து நோட்டமிட்ட நிஷாந்த், வேறு மாநிலத்துக்கு தப்பிச் சென்றிருந்தாரா? என்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரிய வரும். இன்ஸ்டா பிரபலம் மீனாட்சிக்கு கொள்ளைச் சம்பவம் பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. வசதியாக வாழ்வதற்காக கொள்ளையடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

 

 

தொடர்ந்து, நிஷாந்த், மீனாட்சி ஆகியோரின் சமூக வலைதளங்களை பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதன் மீது ஏதேனும் நடவடிக்கை உண்டா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தேவைப்பட்டால் அவர்களின் சமூக வலைதளங்களை முடக்குவோம் என தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon