​திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திணைகாத்தான்வயல் அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்திலிருந்து திணைகாத்தான்வயல், கன்னம்புஞ்சை, நெடுமரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 

​இந்த நீரேற்று நிலையத்தின் அருகிலேயே கடந்த பல மாதங்களாகக் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, பெருமளவில் தண்ணீர் வீணாகி வருகிறது. இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு இடையே, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகச் கண்மாய் அருகே ஓடுவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

​இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. வாரியத்தின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்துள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பழுதைச் சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.