வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு தாயகம் திரும்பி, தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவம் (CRMI) மேற்கொள்ள காத்திருக்கும் மாணவர்களுக்கு தற்காலிகப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைக் கண்டித்து, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் – வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் பிரிவு (TNMSA-FMG) ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் (TNMC) வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு தற்காலிகப் பதிவுச் சான்றிதழ்களை வழங்குவதைத் தாமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிகப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்குவதில் உள்ள தேவையற்ற காலதாமதத்தை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உடனடியாக நிறுத்த வேண்டும். ஆறு மாதங்கள் வரை சில மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்டாயமான ஓராண்டு சுழற்சி மருத்துவப் பயிற்சி (CRMI) காலத்தை, சில வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நீட்டித்து ஒதுக்குவதைத் தடுக்க வேண்டும். தற்போது மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த சி.ஆர்.எம்.ஐ பயிற்சி இடங்களில் (7.5%) இருந்து, இதை 20% ஆக உயர்த்த வேண்டும்.
பயிற்சி மருத்துவம் (CRMI) மேற்கொள்வதற்கு வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு மாவட்ட மருத்துவமனைகளிலும் அனுமதி அளிக்க வேண்டும். பயிற்சி மருத்துவர்களாகப் பணிபுரியும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு விடுதி வசதி செய்து தர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி முதல் வாரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட சங்கம் முடிவெடுத்துள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் சமூக சமத்துவத்திற்கான சங்கத்தின் (DASE) மாநிலப் பொதுச் செயலாளர் ஜி. ஆர். இரவீந்திரநாத் பேசுகையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் இந்தத் தாமதங்களால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு சான்றிதழ்கள் கிடைக்க ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் டேசின் செயலாளர் ஏ. ஆர். சாந்தி மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் – வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் பிரிவின் தலைவர் என். எம். சரண், பொதுச் செயலாளர் எஸ். வசந்த் பிலிப்ஸ் அபிஷேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






