சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்..!

சென்னை மாநகர சாலைகளிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கும் பெண்களின் விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும், விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இது தொடர்பாக வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் எழுப்பிய சென்னையில் உள்ள பல சாலைகள் மற்றும் சிக்னல்களில் பெண்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது வழக்கமாக உள்ளது.

 

இந்தக் குழந்தைகள், அதிக போக்குவரத்து சத்தம் மற்றும் கடும் வெயில் இருந்தபோதிலும் எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. பிச்சை எடுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உருவ ஒற்றுமை இல்லாததால், உண்மையில் அவர்கள்தான் தாயா என்ற சந்தேகம் எழுகிறது. குழந்தைகள் கண் விழிப்பதைத் தவிர்க்க, அவர்களுக்குத் தூக்க மாத்திரை, ஏதேனும் மருந்துகள் அல்லது மதுபானங்கள் கொடுக்கப்படுகிறதா என்று கண்டறிய வேண்டியது அவசியம்.

 

பிச்சை எடுக்கும் பெண்கள் பெரும்பாலும் தமிழ் பேசுவதில்லை. எனவே, இந்தக் குழந்தைகள் வேறு இடங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றனவா? இந்தக் கொடூரச் செயல்களுக்குப் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

 

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் போக்குவரத்து இணை காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு புகார் அனுப்பியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.செந்தில்குமார், “பிச்சை எடுக்கும் குழந்தைகளை குறித்து விசாரணை நடத்தி, ஒருவேளை அவர்கள் கடத்தப்பட்ட குழந்தைகளாக இருந்தால், அவர்களை உடனடியாக மீட்க வேண்டும். கடத்தி வந்து பிச்சை எடுக்கும் பெண்களைக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மனுதாரர் கொடுத்துள்ள கோரிக்கை மனு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 11-ஆம் தேதிக்கு (குறிப்பிட்ட தேதியை ஒட்டி) தள்ளி வைத்தனர்.