ஓரணியில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்..! டெல்லி பாஜகவின் அதிரடி தேர்தல் திட்டம்.. திமுகவை வீழ்த்த பாஜகவின் பீகார் ஆயுதம்!
தமிழக அரசியல் களத்தில் இப்போது கார்த்திகைப் பனி நிலவினாலும், டெல்லியில் இருந்து வீசும் அரசியல் சூறாவளியால் அனல் பறக்கிறது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ஓர் அதிரடி தேர்தல் திட்டத்தை வகுத்துள்ளது பாஜக தலைமை. இதன் மையப்புள்ளி – எதிரெதிர் துருவங்களில் நிற்கும் அ.தி.மு.க. தலைமைகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதுதான். அப்படி என்ன திட்டம் வைத்துள்ளார் அமித்ஷா? அந்த திட்டம், தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு கைகொடுக்குமா? வாருங்கள் விரிவாக அலசுவோம்…
வெற்றி பெற்ற பீகார் ஃபார்முலா!
அண்மையில் நடந்து முடிந்த பீகார் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்றது. நிதிஷ்குமார் வெற்றி பெற்றாலும் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது பாஜக தான். அக்கட்சியின் டெல்லி தலைமை வகுத்துக் கொடுத்த வியூகங்களே, இந்த அசுரபல வெற்றிக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது.
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில், மூலைக்கு ஒரு பக்கம் முகம் திருப்பியிருந்த என்.டி.ஏ. கூட்டணித் தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி, வாக்குச் சிதறலைத் தடுத்து, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கூட்டணிக்கு எதிராக வெற்றியைச் சாத்தியப்படுத்தியது பாரதிய ஜனதா கட்சி. லாலு பிரசாத் யாதவின் குடும்ப அரசியல், நிதீஷ் குமார் மீதான தனிப்பட்ட மனக்கசப்புகள், சிராக் பாஸ்வான் – நிதிஷ் மோதல் எனப் பல குழப்பங்கள் நிலவியபோதும், அமித் ஷா தலைமையிலான வியூகம் அங்கு கைகொடுத்தது.
இதே வெற்றிப் ஃபார்முலாதான், இப்போது தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வின் கோட்டையை அசைத்துப் பார்க்க டெல்லி தலைமையால் கையில் எடுக்கப்பட்டுள்ளது. அதன் முழு இலக்கும், பிளவுபட்டு பலவீனமாகி நிற்கும் அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வருவதே.
ஈபிஎஸ்ஸின் பிடிவாதம்: டெல்லியின் அழுத்தம்

அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுகு பிறகு, கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் ஒரு மாபெரும் இயக்கத்தின் சோகக் கதையாக நீள்கின்றன. ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா என இந்தப் பிளவுபட்ட தலைமைகள் அனைவரும் தனித்துவமான செல்வாக்குடன் இருக்கும் நிலையில், இவர்கள் ஒரு குடையின் கீழ் வந்தால் மட்டுமே வாக்குகள் சிதறாமல் அறுவடை செய்ய முடியும் என்று டெல்லி திட்டவட்டமாக நம்புகிறது.
ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஒற்றைத் தடையாக நிற்பவர் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எங்கே சசிகலாவும் டிடிவி தினகரனும் கட்சிக்குள் வந்துவிட்டால், தனது தலைமைக்கு ஆப்பு அடித்துவிடுவார்களோ என்ற இபிஎஸ் பயந்து கிடப்பதுதான், அவர்களை சேர்க்காமல் இருக்க ஒரே காரணம் என்பது ஊரறிந்த ரகசியம்.
முதல்வர் நீங்கள்தான், ஆனால்…
இந்த சூழலில், ‘பிளவுபட்டவர்கள் அனைவரும் மீண்டும் கூட்டணிக்குள் வர வேண்டும்’ என்ற அமித் ஷா தரப்பின் திட்டவட்டமான முடிவு, எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தர்மசங்கடத்தைக் கொடுத்துள்ளது. அடுத்த வாரமே தமிழகம் வரவிருக்கும் டெல்லி பாஜகவின் மூத்த தலைவர்கள், இந்த விவகாரத்தில் ஈபிஎஸ்ஸின் மனதை மாற்றும் பணியில் தீவிரமாக இறங்கவிருக்கிறார்கள்.
“தேர்தல் வெற்றியையும், அடுத்த முதலமைச்சர் அரியணையையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். ஆனால், இந்தக் கூட்டணி ஒற்றுமை நடந்தால் மட்டுமே அது சாத்தியம்” என்று எடப்பாடியிடம் அழுத்தமாகச் சொல்லப்போகிறார்களாம். ‘தோல்வியைத் தழுவினால், அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கமே ஈபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் காணாமல் போகும் அபாயம் இருப்பதாக’ இங்குள்ள பா.ஜ.க. மூத்த தலைவர்களும் எச்சரித்து வருகின்றனர்.
ஈபிஎஸ்ஸின் அரசியல் இருப்பு கேள்விக்குறியாகும் ஒரு சூழலில், வேறு வழியின்றி அவர் இதற்குச் சம்மதிக்க வேண்டிய கட்டாயம் வரலாம் என்றே டெல்லி தலைமை நம்புகிறது. முதலமைச்சர் பதவி பழனிசாமிக்கு என்பதில் மாற்றம் இல்லை என்று உறுதிமொழி அளித்தாலும், பிளவுபட்ட தலைமைகளை ஒன்றிணைப்பதுதான் உடனடி இலக்கு.
பாமக மோதல்கள்- அமித் ஷாவின் திட்டம்!

அ.தி.மு.க. மட்டுமின்றி, கூட்டணியில் முன்பு இருந்த பாட்டாளி மக்கள் கட்சி மீதும் டெல்லி பாஜக தலைவர்களின் பார்வை திரும்பி உள்ளது. அங்கே, தந்தை டாக்டர் ராமதாஸ் – மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான முட்டல் மோதல்கள், பா.ம.க.வின் வலிமையைப் பாதிக்கக் கூடும் என டெல்லி கருதுகிறது.
ஆகையால், பிளவுபட்டுள்ள பா.ம.க.வின் அணிகளைத் தனித்தனியே அணுகி, அவர்களை என்.டி.ஏ. கூட்டணிக்குள் கொண்டு வருவதே அமித் ஷாவின் அடுத்த திட்டம். இதுதொடர்பாக, தேவைப்பட்டால் டாக்டர் ராமதாஸுடன் அமித் ஷாவே தொலைபேசியில் பேசவும் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக தொகுதி வாரியாக சர்வே விவரங்களுடன், டெல்லி பாஜக நிர்வாகிகள் விரைவில் ராமதாஸை சந்திக்க உள்ளனர்.
அன்புமணி இந்தத் திட்டத்திற்குத் தடையாக இருக்க மாட்டார் என்ற நிலையில், ராமதாஸும் இதற்குச் சம்மதிப்பார் என்றே தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் உறுதியாக நம்புகின்றனர். பீகாரில் சிராக் பாஸ்வான் – நிதீஷ் குமார் கசப்பு இருந்தாலும், வெற்றிக்காகக் கைகோர்த்தது போல, இங்குள்ள தலைவர்களுக்கும் அந்த நிலை வரலாம்.
தேமுதிக முரசு கொட்டுமா?

இறுதியாக, வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த, பா.ஜ.க.வின் டெல்லி தலைமைக்குத் தே.மு.தி.க.வைக் கூட்டணிக்குள் கொண்டு வருவது மிக முக்கிய இலக்காக உள்ளது. அ.தி.மு.க. தலைமையில் இந்தக் கூட்டணி இயங்கும்; பா.ஜ.க. அடுத்த பெரிய கட்சியாக இருக்கும். ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் போன்றோர் பா.ஜ.க.வின் ஆதரவுக் கட்சிகளாக இணைக்கப்படுவார்கள். டி.டி.வி. தினகரனை ஒருமுறை கேட்டுப் பார்ப்பது; அவர் வரவில்லை என்றால் விட்டுவிடுவது என்றும் டெல்லி முடிவெடுத்துள்ளது. ஆனால், தே.மு.தி.க.வின் வரவு, கூட்டணியின் பலத்தைக் கணிசமாக உயர்த்தும் என்பது டெல்லியின் நம்பிக்கை.
பீகார் தேர்தல் வெற்றி தந்த உத்வேகத்துடன், டெல்லி தலைமை தமிழகத் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இனி பிரதமர் மோடி, அமித் ஷாவின் முழு கவனமும் தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் மீதுதான் இருக்கும். பாண்டா உள்ளிட்ட பா.ஜ.க. பொறுப்பாளர்கள் இந்த வார இறுதியிலேயே தமிழகம் வந்து, அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. தலைவர்களைச் சந்திக்கவிருக்கிறார்கள்.
பிளவுபட்ட தலைவர்களை ஒன்றிணைத்து, வாக்குகள் சிதறாமல் அறுவடை செய்த அதே பீகார் வியூகத்தை, ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக டெல்லி கையாளப் போகிறது. வரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தில், இந்தப் ‘புதிய கூட்டு’ பற்றிய தகவல்கள், அடுத்த சில வாரங்களில் தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் உச்சகட்ட பரபரப்பை எட்டும் என்பதில் சந்தேகமில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




