செல்பி எடுக்க முயன்றவர் கூவம் ஆற்றில் தவறி விழுந்து மீட்பு..!
இரவில் செல்பி எடுக்க முயன்ற போது கூவம் ஆற்றில் தவறி விழுந்த நபரை 8 மணி நேரத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர். சென்னை பெரியமேட்டை சேர்ந்த கார்த்தி என்பவர் மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற் கொண்டிருந்தார்.
நேப்பியர் பாலம் அருகே செல்பி எடுக்க முயன்ற அவர் எதிர்பாராத விதமாக கூவம் ஆற்றில் தவறி விழுந்தார். செல்போனும் ஆற்றுக்குள் விழுந்து விட்டதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளார். சேறும் சகதியும் அதிகமாக இருந்ததால் நீந்திச் செல்ல பயந்துள்ளார்.
இதனால் அவர் இரவு முழுவதும் கூவம் ஆற்றில் உதவிக்காக காத்திருந்து உள்ளார். அதிகாலையில் அந்த பகுதி வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்ற தீயணைப்பு படையினர் கயிறு மூலம் கார்த்திக்கை மீட்டுள்ளனர். முதலுதவி செய்யப்பட்ட பிறகு அவர் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.






