தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருப்பூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 22 முதல் 24ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 96.8 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






