--- --:--:-- --

மோடி, அமித்ஷா இன்று தமிழகம் வருகை! தீவிரமடையும் பிரசாரம்!!

Modi CBE 01

சட்டமன்றத் தேர்தலுக்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இன்று தமிழகம் வருகின்றனர்.

 

பிரதமர் மோடி, நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பாஜக – அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், மீண்டும் தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக, பிரதமர் மோடி இன்றிரவு மதுரைக்கு வருகிறார்.

 

மதுரை பிரசாரத்துக்காக மோடி கொல்கத்தாவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இன்று இரவு 8 மணிக்கு மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன்பின்னர் பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

 

அங்கிருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் காரில் புறப்பட்டு, பிரசார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். இதற்காக மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

 

இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமரின் வருகையையொட்டி மதுரை நகரில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் பிரசாரம் செய்கிறார். காலை புதுச்சேரி வரும் அவர் 10 மணி அளவில் கருவடிக்குப்பத்தில் உள்ள சித்தாந்த கோயிலுக்கு சென்றுவிட்டு லாஸ்பேட்டையில் நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார்.

 

பிற்பகல் 12.15 மணிக்கு திருக்கோயிலூருக்கு வரும் அமித்ஷா, அங்கு நடைபெறும் அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார். அதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு வேலாயுதம்பாளையத்தில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்திலும் அமித்ஷா கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon