உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு புகார்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆளும் த.வெ.க. அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மின்வெட்டு புகார்கள் அதிகரித்துள்ளன.
நெல்லை மாவட்டம் முதலியார்ப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தீப்பந்தங்கள், மெழுகுவர்த்திகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை, வடக்கு அரியாவூர் பகுதிகளிலும் தொடர் மின்வெட்டை கண்டித்து 2ஆவது நாளாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் கடவூர் அருகே 10 நாட்களுக்கும் மேலாக 4 முதல் 6 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, திருவள்ளூர் செங்குன்றம் அருகே சிட்கோ மகளிர் தொழில் பூங்காவில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக கூறி தொழில் நிர்வாகிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மின்வெட்டு குறித்து விளக்கமளித்த மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், “காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு. நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு. தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் மின்வெட்டு செய்திகளை குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளும் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். உதயநிதியின் எக்ஸ் பக்கத்தில், “தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




