--- --:--:-- --

கருத்து கணிப்பு பெயரில் பொய்ப்பிரசாரம்… தொண்டர்களுக்கு ஈபிஎஸ்- ஓபிஎஸ் கடிதம்!

EPS OPS 01

சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய்ப் பிரச்சாரங்களால் மக்கள் யாரும் தங்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 

இது தொடர்பாக, அதிமுக தொண்டர்களுக்கு இருவரும் எழுதிய கடிதம்: வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியினை அதிமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பெற்றிட வேண்டும் என்பதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அயராது பாடுபட்டு வரும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்புக்கும், விசுவாசத்திற்கும், அர்ப்பணிப்புக்கும் எப்படி நன்றி கூறுவது, என்ன வார்த்தைகளால் பாராட்டி மகிழ்வது என்று திகைத்துப் போயிருக்கிறோம்.

 

தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று நாங்கள் இருவரும் தேர்தல் பரப்புரை பயணங்களை மேற்கொண்டு வருகிறோம். செல்லும் இடமெல்லாம் உற்சாகத்துடன் நீங்கள் ஆற்றும் பணிகளைப் பார்த்து ஆனந்தம் அடைகிறோம். பேரார்வத்துடன் பல்லாயிரக்கணக்கில் கூடி ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், இளம் பெண்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் எங்களை வரவேற்கும் காட்சியை விவரிக்க வார்த்தையே இல்லை.

 

‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது’ என்று ஆரூடம் சொன்னவர்களும், ‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒரு நாள் தாங்குமா?, ஒரு வாரம் ஓடுமா?, இன்னும் ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும்; இரண்டு மாதத்தில் கவிழ்ந்துவிடும்; ஆறு மாதத்தில் கவிழ்ந்துவிடும்; தீபாவளிக்குள் போய்விடும்’ என்றெல்லாம் ஆரூடம் கூறியவர்களின் மனக்கோட்டைகளைத் தகர்த்தெறிந்து, அவற்றையெல்லாம் தாண்டி அனைவரும் மூக்கில் விரல் வைத்து பிரம்மிக்கும் வகையில் மிகச் சிறந்த ஆட்சியை மக்களுக்கு நாம் கொடுத்துள்ளோம். தற்போது தலைநிமிர்ந்து சென்று மக்களிடம் வாக்கு கேட்கிறோம்.

 

அதிமுக அரசின் சாதனைகளைக் கண்டு வியக்காதவர்கள் இல்லை. மூன்று புயல்கள், ஒரு பெருமழை, வெள்ளப்பெருக்கு; பருவம் தவறிப் பெய்த பேய் மழை, கடுமையான ஒரு வறட்சிக் காலம் என்ற இயற்கைப் பேரிடர்கள் அனைத்தையும் வெற்றிகரமாக சமாளித்து நிவாரணப் பணிகளை திறம்பட மேற்கொண்டோம். தமிழக மக்களின் இன்னல்களைக் களைந்தோம்.

 

நம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதை, எங்கள் அனுபவம் எங்களுக்கு உணர்த்துகிறது. பல்வேறு வல்லுநர்கள், பொதுமக்கள் மூலம் எங்களுக்கு வருகின்ற தகவல்கள், அதிமுகவின் மீது மக்கள் பேரன்பு கொண்டிருப்பதையும், அந்தப் பேரன்பு அரசியல் ஆதரவாக மாறி வாக்குகளாகப் பொழியப் போகிறது என்றே கூறுகின்றன.

 

பத்திரிகைகளும், ஊடகங்களும் பரபரப்புக்காகவும், தங்கள் சந்தை மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ளவும், கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துத் திணிப்பை கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இத்தகைய கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளா? கடந்த காலத்தில் எத்தனை கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் முற்றிலும் தவறாகப் போயின என்பதை நாம் எல்லோரும் அறிவோம் தானே?

 

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தேர்தல் களம் கண்ட காலங்களில் கூட, கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் திணிக்க முயன்ற கருத்துகள் மக்களின் தேர்தல் தீர்ப்புகளின் முன், முனை மழுங்கிப் போயின என்பதை தமிழ்நாடு நன்கு அறியும்.

 

இப்போது, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய்ப் பிரச்சாரங்களால் மக்கள் யாரும் தங்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. ஜெயலலிதாவின் அரசியல் பள்ளியில் பாடம் பயின்ற நம்மை இந்த பொய்ப் பிரச்சாரங்களும், கருத்துத் திணிப்புகளும் என்ன செய்ய முடியும்? தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நம் அதிமுகவினர் அனைவரும், கூட்டணிக் கட்சியினரை அரவணைத்து முழு மூச்சுடன் பணியாற்றி, தொடர் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம். வெற்றி மாலையை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களில் சமர்ப்பிப்போம் என்று, ஓபிஎஸ் – ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon