திமுக கூட்டணியில் இ. கம்யூனிஸ்ட்டுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; இதற்கான உடன்பாட்டில், இரு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று கட்சிகளுடன் மட்டுமே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை உடன் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
இந்த சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன், பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றுவருவதாகவும் நாளை (இன்று) ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்திய கம்யூனிஸ் கட்சி நிர்வாகிகள், தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். அதன்முடிவில், திமுக தரப்பிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கும் 6 இடங்களை ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சற்றுமுன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முத்தரசன், சாதி வெறிக்கும், மதவெறிக்கும் இடம் கொடுக்காத தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முயற்சிக்கிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற வேண்டிய அவசியம் உள்ளது. தொகுதி எண்ணிக்கையா? லட்சியமா? என்றால் லட்சியம் தான் எங்களுக்கு முக்கியம் என்றார்.
அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் வலுவாக காலூன்ற பார்க்கிறது. ஒருபுறம் அதிமுக – பாஜக அணி, மறுபுறம் இவர்களால் உருவாக்கப்பட்ட வேறொரு அணி. இதை எதிர்கொள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பலம் முக்கியம் என்றும் முத்தரசன் குறிப்பிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




