விஜய் அரசை புகழ்ந்த விமர்சகர் – கமெண்டில் வந்து எச்சரிக்கை கொடுத்த உதயநிதி
திரைப்பட விமர்சகரும் பத்திரிகையாளருமான ராஜசேகர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றும், அதற்கு தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலடியும் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ படத்தின் திரையிடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜசேகர், “தமிழகத்தில் முந்தைய திராவிட ஆட்சிகளில் திரைப்படங்களுக்குக் கூடுதல் காட்சிகள் அனுமதிக்கப்படுவதில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. அதிகாலை நேரக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
ஆனால், தற்போதைய விஜய் தலைமையிலான அரசு இதில் தாராள மனப்பான்மையுடன் செயல்பட்டுள்ளது. ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அரசியல் ரீதியாகப் போட்டியாளராக உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனத்தினுடையது என்றாலும், அதற்கு காலை 8.30 மணி காட்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் ஏதுமின்றி திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 6 மணி காட்சிகளும் அனுமதி பெறலாம் போல் தெரிகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமா ஒரு பொற்காலத்தைக் காண்கிறது. சினிமா ஒரு சுதந்திரமான சந்தையாக இயங்குவதை உறுதி செய்ததற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றிகள்” என்று பதிவிட்டிருந்தார்.
ராஜசேகரின் இந்தப் பதிவிற்கு சட்டென பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “ஹாய் ராஜசேகர், எப்படி இருக்கிறீர்கள்? போலிச் செய்திகளை பதிவிடுவதற்கு முன்பாக தயவுசெய்து சிறிது ஆராய்ச்சி செய்து உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். அடுத்த முறை நான் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு என்னைத் தள்ள வேண்டாம்.. பார்த்துக்கொள்ளுங்கள்” என எச்சரிக்கை விடுக்கும் பாணியில் கமெண்ட் செய்தார்.
உதயநிதியின் இந்த எச்சரிக்கைப் பதிவுக்குத் தனியாகப் பதிலளித்த ராஜசேகர், “ஹாய் உதயநிதி சார், நலமாக இருக்கிறேன், உங்களைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. என் கருத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் நிச்சயமாக ஆராய்ந்து சரிபார்க்கிறேன். நன்றி…” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவாதம் எக்ஸ் தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்களும் சினிமா ரசிகர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
“காலை 6.30 மணி காட்சி பொற்காலமா? இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப தேவையான ஒன்று. சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமே, 3 மணி நேரம் கழித்து படம் பார்ப்பதால் உலகம் ஒன்றும் மூழ்கிவிடாது. உயிர்பலிகளைத் தடுக்கவே அதிகாலை காட்சிகள் நிறுத்தப்பட்டன” எனச் சிலர் பதிவிட்டுள்ளனர்”8.30 மணி காட்சிகள் தற்போதைய அரசிற்கு முன்பே திரையிடப்பட்டு வருகின்றன. எந்தவித ஆதாரமும் இல்லாமல் கண்முடித்தனமாக ஆதரிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று சிலர் ராஜசேகரின் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்த எக்ஸ் பதிவு விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





