மருத்துவ கலந்தாய்வு நடத்த முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!
கட்டண பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சுப்ரமணியன், சேகர் பாபு ஆகியோர் முதலமைச்சர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அந்த கடிதத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு அனுமதிக்கான இடம் பெற்ற மாணவ, மாணவிகள் பலர் தங்களால் கல்விக்கட்டணம் செலுத்த முடியாது என்பதால் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்து இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் மருத்துவக் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முன்கூட்டியே தெரிவிக்காததால் இன்றைக்கு பல மாணவர்களின் மருத்துவ கனவு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்று ஆகிவிட்டதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனவே கல்வி கட்டணம் செலுத்தும் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் மீண்டும் கலந்தாய்வு நடத்தி அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்வியில் சேர உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரை முகஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.






